Published : 18 Nov 2015 03:56 PM
Last Updated : 18 Nov 2015 03:56 PM

பாலாற்றில் 10 ஆண்டுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு: வேலூர் மக்கள் மகிழ்ச்சி

அகரம் பேயாற்றில் 2-வது முறையாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, வேலூர் பாலாற்றை நேற்று அதிகாலை வந்தடைந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் வந்ததையடுத்து, வேலூர் மேயர் கார்த்தியாயினி, விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து, 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்டுகளை வழங்கினர்.

வேலூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால், பாலாற்றில் வெள்ளம் ஏற்படுமா என பொது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த் திருந்தனர். மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் பத்தாண்டு களுக்குப் பிறகு வேலூர் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

பேயாறால் வந்த வெள்ளம்

மேல்அரசம்பட்டு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் அகரம் பேயாற்றில் 2 முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பாலாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும், ஒடுகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், வெள்ளமாக பெருக்கெடுத்து, விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை நேற்று முன்தினம் கடந்தது.

வெள்ள நீர் நேற்று அதிகாலை வேலூர் பாலாறு பாலத்தை வந்தடைந்தது. செம்மண் நிறத்தில் வந்த வெள்ள நீரைப் பார்த்ததும் பொதுமக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர். நேரம் செல்லச் செல்ல நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

பாலாறு ரயில்வே மேம்பாலம், புதிய பாலத்தைக் கடந்த வெள்ளம், பழைய பாலாறு பாலத்தை கடந்து சென்றதை ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துச் சென்றனர்.

பெண்கள் சிலர் பாலாற்று நீரில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். குழந்தைகள் ஆச்சரியத்துடன் பாலாற்று வெள்ளத்தை ரசித்தனர். பழைய மற்றும் புதிய பாலத்தில் வெள்ளத்தைக் காண அதிகப்படியான மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கடந்த 2005-ம் ஆண்டு பாலாற்று நீர் பிடிப்புப் பகுதிகளான கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தற்போது, ஆந்திராவில் குப்பம் வனப்பகுதியில் மட்டும் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது.

இதனால், தமிழக எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையை கடந்து அம்பலூர் வரை வெள்ள நீர் வந்துள்ளது. இந்த தண்ணீரையும் கொடையாஞ்சி ஏரி மற்றும் நாகநேரி ஏரிக்கு திருப்பிவிட்டுள்ளனர்.

(பாலாற்றில் வெள்ளப்பெருக்கு வருவதை மகிழ்ச்சியுடன் கண்டு செல்லும் பொதுமக்கள்| படம்: வெங்கடாசலபதி)

500 பேருக்கு லட்டு

வேலூர் பாலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை பசுமை பாலாறு இயக்கத்தின் தலைவரும் விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம், மேயர் கார்த்தியாயினி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். பாலாற்று நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 500-க்கும் மேற்பட்டோருக்கு லட்டுகளை வழங்கினர்.

பலத்த மழையால் வேலூர் பாலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் வந்தது. காட்பாடி- வேலூர் இடையே உள்ள பாலத்துக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வெள்ளத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x