Published : 25 Jan 2021 04:40 PM
Last Updated : 25 Jan 2021 04:40 PM

கவுன்சிலர்களுக்கு சம்பளம்; உறுப்பினரைத் திரும்பப் பெறும் உரிமை; கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 14 திட்டங்கள்: மக்கள் நீதி மய்யம் வெளியீடு

கோவை

ஒட்டுமொத்த வரவு-செலவு விவரங்களை வெளிப்படையாக வைப்பது, உறுப்பினரைத் திரும்பப் பெறும் உரிமை, பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம், சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளிட்ட கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 14 திட்டங்களை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.

கோவையில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மகேந்திரன், குமரவேல், சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் இதனை வெளியிட்டனர்.

அதன் விவரம் வருமாறு:

கிராமப்புற உள்ளாட்சி

1. பஞ்சாயத்துகளின் 3 அடுக்குகளுக்கும் நிதி திரட்டப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கிடைக்கச் செய்தல்.

3. ஆன்லைன் பஞ்சாயத்துகள், கிராம சபைத் தீர்மானங்கள், இவற்றின் தற்போதைய நிலை மற்றும் ஊராட்சியின் ஒட்டுமொத்த வரவு-செலவு விவரங்களை ஒருங்கிணைந்த முறையில் இணையம் மற்றும் செயலியின் வழியாக மக்கள் கண்காணிப்பதற்கும் வழிவகை செய்யப்படும்.

4. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்வைக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக உள்ள, தமிழக உள்ளாட்சி முறை மன்ற நடுவத்தின் அதிகார வரம்பின் கீழ், கிராமப்புற உள்ளாட்சிகளும் கொண்டுவரப்படும். இது மாநில, மாவட்ட அளவிலான முறைமன்ற நடுவமாகச் செயல்படும்.

5. கிராம சபைகள் வலுவாக்கப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதியைத் திரும்பப் பெறும் உரிமையானது கிராம சபைகளுக்குக் கொடுக்கப்படும்.

6. உள்ளாட்சி நிர்வாகத்தில் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்காக மாநில அளவில் ஒரு தன்னாட்சி நிறுவனம் உருவாக்கப்படும்.

7. பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி

1. ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டம் இயற்றப்படும்.

2. நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

3. குடிமக்களுக்குத் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக, ஸ்மார்ட் போன்கள் மூலமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும் ஆன்லைன் மயமாக்கப்படும்.

4. வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, குறிப்பாக சென்னையில் இந்தத் தாக்கத்தைத் தணிப்பதற்காக சிங்கப்பூரில் இருப்பது போல் சர்வதேச தரத்தில் நிரந்தரத் தீர்வு காணப்படும்.

5. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அனைத்து நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் கட்டாயமாக்கப்படும்.

6. சுத்தமாகவும், பசுமையாகவும் மாற வேண்டும் என்ற சுற்றுச்சூழல் உணர்திறனில், சர்வதேச தரத்தில் குடிமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன், அனைத்து டவுன் பஞ்சாயத்து, நகராட்சி அல்லது மாநகராட்சியும் அரசால் பெருமளவில் ஆதரிக்கப்படும்.

7. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி, சுய நிர்வாக அதிகார வரம்புகளிலும், போக்குவரத்து நிர்வாகத்திலும் சர்வதேசத் தரங்கள் பின்பற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x