

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். பாஜகவில் அவர் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுபற்றிக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் இன்று (ஜனவரி 25) கட்சி அலுவலகத்தில் கூறும்போது, ''புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்தியுள்ளார். அமைச்சர் என்பதை மறந்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப் போகிறேன் என்று சொல்கிறார்.
காங்கிரஸ் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகி வாருங்கள் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுகிறார். கட்சிக்குத் துரோகம் செய்து வருகிறார்.
அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர் என இரட்டைப் பதவி வகிப்பது கட்சி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று தலைமை அறிவுறுத்தியதால் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தலைவராக வைத்து அழகு பார்த்த காங்கிரஸில் இருந்து விலகி தற்போது மாற்றுக் கட்சிக்குப் போகும் எண்ணத்தில் நமச்சிவாயம் உள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.