

அறுவை சிகிச்சைக்குப் பின் மருந்துகளை உட்கொள்ளாததால், பெருந்தமனியில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட ஏழை சிறுவனுக்கு ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாயை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தினர்.
ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சங்கர். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன், சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனை செய்து பார்த்ததில், பெருந்தமனியில் (ரத்தக்
குழாய்) குறிப்பிட்ட இடத்தில் வீக்கம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வீக்கத்தை சரிசெய்தனர்.
குணமடைந்த சிறுவன் வீட்டுக்கு சென்றான். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக முறையாக மருத்துவமனைக்கு வராமலும், மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமலும் இருந்துள்ளான். இதனால், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் வீக்கம் உண்டாகி வலி அதிகரித்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆலோசனையின்படி, தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் நவீன முறையிலான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் தரன் தலைமையில் இதய ரத்தநாள் துறை தலைவர் ஜோசப்ராஜ், மருத்துவர்கள் தீப்தி, பாலாஜி, சரத் ஆகியோர்
கொண்ட குழுவினர் சிறு துளை மற்றும் சிறிய அளவிலான பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாயை வெற்றிகரமாக பொருத்தினர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார். ஏழை சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை பாராட்டினார்.
இதுதொடர்பாக மருத்துவர் தரனிடம் கேட்டபோது, “அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவன் முறையாக மருந்துகளை சாப்பிடாததால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஸ்டென்டுடன் கூடிய
செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாய் மட்டும் ரூ.1.70 லட்சம். இனி சிறுவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மருந்துகளை மட்டும் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும்” என்றார்.சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஏழை சிறுவனுக்கு ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது.