Last Updated : 25 Jan, 2021 03:14 AM

 

Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

வைரஸ் தொற்றுக்கு எதிரான போர் முடியவில்லை.. இன்னும் 3 ஆண்டுகளுக்கு எச்சரிக்கை அவசியம்; கரோனா தடுப்பூசியில் அரசியல் செய்யக் கூடாது: 94 வயதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே அறிவுரை

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் எச்.வி.ஹண்டே. 94 வயதாகும் இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தயக்கம் காட்டிவரும் நிலையில், எச்.வி.ஹண்டே தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவருடன் பேசியதில் இருந்து..

நீங்களே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா அல்லது அரசு தரப்பில் கேட்டுக்கொண்டார்களா?

யாரும் என்னை வற்புறுத்தவில்லை. ஹண்டே மருத்துவமனை நடத்துகிறேன். பல நோயாளிகளை பார்க்கிறேன். நான் மருத்துவர் என்பதால் தடுப்பூசியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும். அதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ‘94 வயதில் இவரே போட்டுக்கொள்கிறாரே’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த என்னால் இயன்ற சிறு முயற்சி. ஒரு மாதம் கழித்து 2-வது தவணையும் போட்டுக்கொள்வேன். அவரவர் சமயம் வரும்போது கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

என்ன தடுப்பூசி போட்டுக்கொண்டீர் கள்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

‘கோவிஷீல்டு’ போட்டுக்கொண்டேன். ஒருவேளை அங்கு ‘கோவேக்ஸின்’ இருந்திருந்தால், அதை போட்டிருப்பேன். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவது கோவேக்ஸின். வெளிநாட்டில்கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் உற்பத்திசெய்யப்படுவது கோவிஷீல்டு. இரண்டும் கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

தடுப்பூசியால் என்ன பயன்?

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனால், நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பும் தடுக்கப்படும்.

பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டதா?

ஊசி போடும்போது வலிகூட இல்லை.பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசி போட்ட பிறகு, என் வழக்கமான செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவும் இல்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?

‘தடுப்பூசிதான் போட்டுவிட்டோமே. இனிமேல் நமக்கு கரோனா வராது’ என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் கைகுலுக்கக் கூடாது. கட்டிப் பிடிக்கக் கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தலாமா, புகை பிடிக்கலாமா?

மது, புகை இரண்டுமே உடல்நலத்துக்கு கேடு. மதுவைவிட புகை பிடிப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பழக்கத்தை முதலில் விட வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணைக்கு இடையே உள்ள ஒருமாதம் கண்டிப்பாக மது, புகை கூடாது.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரள அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

ஆரம்பத்தில் கேரளாவில் தொற்று குறைவாகத்தான் இருந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். பிறகு, அலட்சியமாக இருந்துவிட்டனர். கரோனா தொற்று தடுப்பில் தவறான முறையை கையாண்டதால் நாட்டிலேயே மகாராஷ்டிரா, கேரளாவில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழக அரசு இனிமேல் என்ன செய்ய வேண்டும்?

‘கரோனா தொற்றை கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், கேரளாபோல தமிழகத்திலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும். இந்த போர் முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோவேக்ஸின் 3-வது கட்ட பரிசோதனை முடிவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகிறதே.

அப்படி எல்லாம் இல்லை. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகுதான் கோவேக்ஸின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு இருந்தால், இவர்கள் போட்டிருப்பார்களா? அரசியல் கட்சியினர் இதில் அரசியலை புகுத்தாமல், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் இந்த போரில் வெற்றி பெற முடியும்.

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் ஏன் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனரே?

ஒருவேளை முதலிலேயே அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால், ‘தேவையானவர்களுக்கு போடாமல், முதலில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டார்கள்’ என்று விமர்சிப்பார்கள். யார் யாருக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்ற முன்னுரிமை பட்டியலை விஞ்ஞானிகள்தான் தயார் செய்து கொடுப்பார்கள். அதன்படிதான் கரோனா தொற்று தடுப்பூசி போடப்படுகிறது. இதில், அரசியல் செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு

கரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளே தொற்றை கட்டுப்படுத்த திணறிய நிலையில், இந்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து தொற்றைகட்டுப்படுத்தியுள்ளது. முதலில் தொற்று பரவிய சீனாவிலும் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனா ஜனநாயக நாடு அல்ல. அங்கு அரசின் உத்தரவை மீறினால் விளைவுகள் வேறுமாதிரி இருக்கும். பல தரப்பினர் நிறைந்த ஜனநாயக நாடான இந்தியாவில் தொற்றை கட்டுப்படுத்தியதுதான் மிகப்பெரிய சாதனை. மத்திய அரசு இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடும் மிக நன்றாக இருக்கிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுத்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சராக நான் செயல்பட்டதைவிட, தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேகமாக செயல்படுகிறார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் செயல்பாடும் பாராட்டுக்குரியது. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x