

இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் பிப்ரவரிஇறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
கரோனா பரவல் காரணமாக இதுதொடர்பான பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது பரவல் தணிந்துள்ள நிலையில் ராக்கெட் ஏவும் திட்டங்களை இஸ்ரோ மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி, தற்போது பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோளை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
பிரேசில் தேசிய விண்வெளிஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த இந்த செயற்கைக் கோள்ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் பிப்ரவரி இறுதியில்விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ராக்கெட்டில் இந்திய நிறுவனங்களான பிக்ஸல் ஸ்டார்ட்அப் மையத்தின் ‘ஆனந்த்’, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘சதிஷ்’,பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் ‘யுனிவ்சாட்’ ஆகிய 3 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.