

வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசுவதால் சேலம், தருமபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் குளிர் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம், வழக்கத்துக்கு மாறாக இந்த முறை ஜனவரி 18-ம் தேதி வரை நீடித்தது. பல மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களைவிட ஜனவரியில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மார்கழி மாதத்தில் குளிர் நிலவவில்லை. கடந்த 19-ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகியதைத் தொடர்ந்து தற்போது பல இடங்களில் குளிர்அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உள் மாவட்ட நிலப் பகுதிகளில் குளிர் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் வரும்25, 26, 27 தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 28-ம் தேதி காரைக்கால் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
வடகிழக்கு பருவமழை விலகியதால், வடகிழக்கு திசையில் இருந்து வீசிய ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று நின்றுவிட்டது. தற்போது வடக்கு பகுதியில் வீசும் குளிர் காற்று ஈர்க்கப்பட்டு, வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி காற்று வீசுகிறது. இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மலைப் பிரதேசம் அல்லாத நிலப்பகுதிகளில் இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்து வருகிறது. அதனால் குளிர் அதிகரித்துள்ளது.
24-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நிலப்பகுதிகளான தருமபுரி, நாமக்கல், சேலம், வேலூர் மாவட்டங்களில் இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலையாக 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மலைப் பிரதேசங்களான கொடைக்கானல், உதகையில் 7, குன்னூரில் 9, வால்பாறையில் 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இம்மாதம் முழுவதும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது. வடதமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும்.
தமிழக கடலோரப் பகுதியில் எப்போதும் சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காற்று வீசுவதால், கடலோரப் பகுதிகளில் குளிர் குறைவாகவே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.