

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு ஆண்டவர் ரவுலா ஷரீப்பில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில், 464-வது கந்தூரி விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
நாகை அபிராமி அம்மன் திடல் அருகிலிருந்து புறப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம், புதுப்பள்ளி தெரு, யாஹுசைன் தெரு, சர் அகமது தெரு, அண்ணா சிலை, பொது அலுவலக சாலை வழியாகச் சென்று, நாகூர் எல்லையை அடைந்தது.
தொடர்ந்து, அங்குள்ள கூட்டுப் பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி, பின்னர் வாணக்காரத் தெரு, தெற்குத் தெரு, அலங்கார வாசல் வழியாக வந்து, அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக் குடம் வாங்கப்பட்டு, கூட்டில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, கால்மாட்டு வாசல் வழியாக நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சந்தனக் குடம் தர்காவுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு, தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் ஆண்டவர் ரவுலா ஷரீப்பில் சந்தனம் பூசினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, இன்று(ஜன.25) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், ஜன.27-ம் தேதி புனிதக் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு, எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா தலைமையில், 12 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.