

திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக் குழுக்கள் இன்று முடங்கி உள்ளன என திமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
காரைக்குடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பிலும், சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் அவர் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை வசதி என ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒரு புதிய தொழிற்சாலைகூட வரவில்லை.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. கிராமச் சாலைகளை விடுத்து, எட்டு, பத்துவழிச் சாலை அமைக்கின்றனர். தேவை யில்லாத பகுதிகளில் பாலம் அமைக்கின்றனர். சுய உதவிக் குழுக்களுக்கு கடன், மானியம் வழங்கவில்லை. இதனால் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக் குழுக்கள் இன்று முடங்கிஉள்ளன.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. ஸ்டாலின் முதல்வரானால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். நான் விவசாயி எனக்கூறும் பழனிசாமி பச்சை துண்டை கட்டிக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார். பாதாளச் சாக்கடை திட்டம் பல இடங்களில் கிடப்பில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்குத் தீர்வு காணப்படும்.
தமிழர்களின் அடையாளம், உரிமைகளை டெல்லி எஜமானர்களிடம் அடகு வைத்துள்ளார் பழனிசாமி. கதர் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான சிவகங்கை யிலேயே கதர் மையம் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் கேஆர். பெரிய கருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.