

தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் பேசினார்.
தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இண்டூரில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய துணை செயலாளர் வேடி தலைமை வகித்தார். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் வரவேற்றார். தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:
திமுக தமிழகம் முழுக்க பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினால் தமிழக மக்களுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது. சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் நிறை வேற்றி வரும் அரசாக அதிமுக தலைமையிலான தமிழக அரசு உள்ளது. இந்த அரசின் சாதனைகளை மகளிர் அனைவரும் வீடுகள் தோறும் சென்று விளக்க வேண்டும்.
ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த விவசாய கடனை ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்கியவர் இன்றைய தமிழக முதல்வர். தொடர்ச்சியாக 2 முறை வென்று தமிழகத்தில் நல்ல ஆட்சியை வழங்கி வரும் அதிமுக 3-வது முறையும் வென்று ஆட்சியில் அமரும் வகையில் அனைவரும் கடுமையான உழைப்பில் ஈடுபட வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அதிமுக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளா் சிவப்பிரகாசம், கடத்தூர் ஒன்றிய செயலாளா் மதி வாணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.