

திருச்சி மாநகராட்சியில் ஏழை, எளியோருக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘அன்புச் சுவரில்’ அதிக அளவிலான ஆடைகள் அலங்கோலமாக இறைந்து கிடக்கின்றன. அதன் அருகில் உள்ள ‘அட்சய பாத்திரம்’ மையம் உணவு ஏதும் வைக்கப்படாமல் காலியாக காணப்படுகிறது.
மக்கள் தங்களுக்குத் தேவைப் படாத, அதேவேளையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள எந்தப் பொருளையும் பிறருக்கு இலவசமாக வழங்கும் நோக்கில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில் 2017 டிச.23-ம் தேதி ‘அன்பு சுவர்’ மையம் திறக்கப்பட்டது. ஆனால், இந்த மையத்தில் பழைய ஆடைகளைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை. இந்த ஆடைகளை ஏழை, எளிய மக்கள் தினமும் வந்து எடுத்துச் செல்கின்றனர்.
இதன் அருகில், 2019 செப்.13-ம் தேதி ரூ.10 லட்சம் செலவில் குளிர்பதன(பிரிட்ஜ்) வசதியுடன் கூடிய ‘அட்சய பாத்திரம்’ மையம் திறக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் வைக்கும் கெட்டுப் போகாத பொட்டல உணவுகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை ஏழை, எளிய மக்கள் இலவசமாக எடுத்து உட்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கிய ஓரிரு நாட்களுக்குப் பிறகு இப்போது வரை ‘அட்சய பாத்திரம்’ மையம் எப்போதும் காலியாகவே கிடக்கிறது.
இதனால், இங்கு உணவு தேடி யாரும் வருவதேயில்லை. இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ‘அன்புச் சுவர்’ மையம் மூடப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்ட இந்த மையத்தில் மீண்டும் ஆடைகள் குவிந்து விட் டன. ஆடைகள் அடுக்கி வைக்கப் படாமல் குப்பை போல இறைந்து கிடக்கின்றன. இதே போல, ‘அட்சய பாத்திரம்’ மையமும் தூசி படிந்து பயனற்று கிடக்கிறது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மாநகராட்சி கோட்ட அலுவலக வாயிலில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டிருந்தும், முறையாக கண்காணிப்பதில்லை. ‘அன்புச் சுவரில்’ ஆடைகளை அடுக்கிவைக்காமல் இருப்பது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, அங்குள்ள ஆடைகளை அடுக்கிவைக்கவும், பராமரிக்கவும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, ‘அட்சய பாத்திரம்’ மையம் குறித்து திருமண மண்ட பங்கள், பேக்கரிகள், விடுதிகள் ஆகியவற்றுக்கு மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை இங்கு ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.
இரு மையங்களையும் தின மும் தூய்மைப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும். இல்லை யெனில், சிறந்த தொண்டு நிறுவ னத்திடம் இந்த மையங்களை ஒப்படைத்து நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான், இந்த மையங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்’’ என்றனர்.