Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக வரவேற்கிறது: பொதுச் செயலாளர் துரைமுருகன் தகவல்

காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச் சாரத்தை தனித்து மேற்கொள்வது பாராட்டுக்குரியது, திமுக அதை வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், மதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் கிராம சபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுதி பொறுப்பாளரும், மாநகராட்சி 1-வது மண்டல முன்னாள் தலைவரு மான எம்.சுனில்குமார் தலைமை வகித்தார். திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்ததை பக்தி நாடகம் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். திமுக கையில் வேல் எடுத்ததே சூரசம்ஹாரத்துக்கு தான். இனி நடப்பதை பாருங்கள். திமுகவினர் பகுத்தறிவாதிகள் என்றாலும் கடவுள் பக்தி இல்லை என சொல்ல முடியாது. பகுத்தறிவாதிகளுக்கு பக்தி இருக்கக்கூடாதா? கடவுளை நாங்கள் பகுத்தறிவுடன் தான் பார்க்கிறோம்.

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக பல ஆண்டு களாக கூறி வருகிறது. தற்போது, பேரறிவாளனின் விடுதலை குறித்த அறிவிப்பை தமிழக ஆளுநர் ஒரு வார காலத்தில் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநர், பேரறிவாளனின் விடுதலை அறிவிப்பை நல்ல முறையில் அறிவிப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு முன்பாக நல்ல முடிவை கொடுத்துவிட்டு ஆளுநர் பெருமையுடன் நடந்துக்கொள்வார் என நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்த்து ஆளுநர் தனி ஆட்சி ஒன்றை நடத்தி வருகிறார். துணை வேந்தர் பதவி நீட்டிப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அதற்கான அனுமதியை அளித்துள்ளார். துணை வேந்தர் களின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர்களுக்கான பதவி நீட்டிப்பை ஆளுநர் வழங்குகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு அதிமுக அரசு எங்களுக்கு அழைப்பு விடுக்காது என்பதால், அந்நிகழ்ச்சியில் திமுக கலந்து கொள்ளாது. தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு காங் கிரஸ் கட்சி தற்போது தனித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளதை வரவேற்கிறோம். காங் கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடு களை திமுக வரவேற்கிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் வெளியேறுவதாக கூறுகிறார்கள், அதை பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை, எங்கள் கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். எங்களை நம்பி புதிய கட்சிகள் கூட்டணி அமைக்க வந்தால் திமுக நிச்சயம் அவர்களை வரவேற்கும்’’என்றார்.

முன்னதாக, காட்பாடி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பழைய காட்பாடி 8-வது வார்டில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர் வன்னியராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளர் தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x