Last Updated : 24 Jan, 2021 07:02 PM

 

Published : 24 Jan 2021 07:02 PM
Last Updated : 24 Jan 2021 07:02 PM

சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் கே.பழனிசாமி

சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று, தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கோவை பரப்புரையில் முதல்வர் கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி, கடந்த இரு நாட்களாகக் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஈடுபட்டார்.

அன்னூர்

அன்னூரில் பேசும்போது, 'விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 நிறைவேற்றப்படும். குடிமராமத்து பணிகள் மூலமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டு, தற்போது அவற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது. வீடில்லா அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி போதவில்லை என்ற கோரிக்கையை ஏற்று, வீட்டுக்கு ரூ.70 ஆயிரம் வீதம், ரூ.1,804 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏழைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்' என்றார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் பேசும்போது, 'விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை கூட்டுறவுச் சங்கங்களில் வைத்து விற்க வசதி செய்யப்பட்டுள்ளது.

விற்காமல் இருக்கும் பொருட்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செய்த தானியங்களை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பு வைக்க, குடோன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கி வருகிறது.

அதிமுக-வின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி, பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, மதிவண்டி உள்ளிட்ட நலத்திட்டங்கள், பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. மருத்துவப் படிப்புக்கான உள் ஒதுக்கீட்டில் இன்று 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான அறிவிப்புகள், அதிமுக தேர்தல் அறிவிப்பில் இடம் பெறும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 3-வது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும்' என்றார்.

பெ.நா. பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்தில் பேசும்போது, ”கோவை தொழில்வளம் மிக்க மாவட்டம். திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் உபரி மின்சாரம் உற்பத்தியாகி, மின்மிகை மாநிலமாக உள்ளது. புதிய தொழில்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை, விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலம், தமிழ்நாடு. திமுக ஆட்சியில் இருந்தால் ரவுடியிசம் பெருகி விடும். ஏதாவது வளமான இடம் தெரிந்தால், பட்டா போட்டு விடுவார்கள். தந்தை, மகன், மகள், மகனின் மகன் மட்டுமே பதவிக்கு வர முடியும். தொண்டர்கள் யாரையும் பதவிக்கு வர விடமாட்டார்கள். அதிமுக-வில் மட்டுமே சாதாரணத் தொண்டனும், உயர் பதவிகளுக்கு வர முடியும். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். கரோனா தொற்று காலம், மிகவும் சோதனையான காலம். பொங்கல் பண்டிகை வந்த போது, தமிழக அரசு ரூ.2,500 வழங்கி உதவியது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றவர்தான், திமுக தலைவர் ஸ்டாலின். இதையெல்லாம் மக்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் அதிகாரத்திற்கு வர விடக்கூடாது” என்றார்.

சாய்பாபாகோயில்

சாய்பாபா கோயில் பகுதியில் பேசும்போது, ”நான் ஆட்சி பொறுப்பேற்ற போது, இந்த ஆட்சி 6 மாதத்தில் போய்விடும். 1 மாதத்தில் போய் விடும் என்றார், ஸ்டாலின். அவ்வளவு அவமானங்களைச் சந்திந்தோம். ஒற்றுமையாக இருந்து நான்கரை ஆண்டுகளை பூர்த்தி செய்து விட்டது. இந்த கட்சியை உடைக்கும் என்ன வேண்டாம். உங்கள் கட்சி உடையாமல் பார்க்க வேண்டாம். மதுரையில் அழகிரி கூட்டம் நடத்தினார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றார். ஒருவேளை அவர் கட்சி ஆரம்பித்தால் திமுக உடைந்துவிடும். அதிமுக ஜனநாயகக் கட்சி. தொண்டர்கள் உயர்பதவிக்கு வர முடியும். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும். ஊழல் என்ற சொல்லுக்கு விதையிட்டதே திமுக-தான். ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக தான். அவர்கள் அதிமுகவைக் குறை கூறலாமா?. செல்லும் இடங்களிலெல்லாம் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். தினமொரு அவதாரம் எடுத்து வருகிறார். இது தொழில்நுட்ப உலகம். நாம் என்ன சொன்னாலும், அது மக்களிடம் அடுத்த நிமிடம் சென்று விடும். எனவே உண்மையைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். அதிமுக கட்சி, மக்களுக்கான கட்சி. எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்” என்றார்.

வடவள்ளி

வடவள்ளி பகுதியில் பேசும்போது, ”பெண்கள் பாதுகாப்பாக வாழும் பகுதி கோவை. இந்நிலையில் திமுக மாதிரி கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்நிலை மாறிவிடும். வடவள்ளி 4 வழிச்சாலை, 18 மழை நீர் ஓடைகள், தடுப்பணைகள், நொய்யல் ஆறு 0-34 கி.மீ. வரை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இந்த அரசு வழங்கும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்குக் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டால், அங்கு சென்று பரிசோதனை செய்து, மருந்துகள் வாங்கிக் கொள்ளலாம். அதிமுக அரசு மக்களுக்கான அரசு என்பதை நினைவில் கொண்டு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

முதல்வர் கே.பழனிசாமியின் இந்த பரப்புரையில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓ.கே. சின்னராஜூ (மேட்டுப்பாளையம்), பி.ஆர்.ஜி. அருண்குமார் (கோவை வடக்கு), வி.சி.ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சா.ஞானசேகரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x