Last Updated : 24 Jan, 2021 06:26 PM

 

Published : 24 Jan 2021 06:26 PM
Last Updated : 24 Jan 2021 06:26 PM

வாணியம்பாடி- ஊத்தங்கரை இடையிலான சாலை விரிவாக்கப்பணி: பூமி பூஜையுடன் இன்று தொடக்கம், 2 ஆண்டுகளில் முடிக்க உத்தரவு

வாணியம்பாடியில் இருந்து ஊத்தரங்கரை வரையிலான சாலை விரிவாக்கப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிவு பெறும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூரில் இருந்து ஊத்தங்கரை வரையிலான இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது.

ஜோலார்பேட்டை ஒன்றியம் கோடியூர் அடுத்த மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரிப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டு சாலை விரிவாக்கப்பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

”பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்த சாலையை இருவழிச்சாலையைாக அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு, திருப்பத்தூர், ஊத்தங்கரை வழியாக சேலம் செல்ல இந்த சாலையை சீரமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் மத்திய அரசு இச்சாலையை தன்கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொண்டது. இதனால், மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாறியது.

இதைதொடந்து, இருவழிச்சாலையாக இருந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக சீரமைக்க மத்திய அரசு ரூ. 300 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை தொடங்க உத்தரவிட்டது. பல்வேறு இடர்பாடுகளை தொடர்ந்து வாணியம்பாடி - ஊத்தங்கரை சாலை விரிவாக்கப்பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இச்சாலையை கொண்டு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்தனர். தற்போது அதற்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

சாலை விரிவாக்கப்பணிகளுக்காக முதல்கட்டமாக சாலையோரமுள்ள மரங்கள் அகற்றப்படும். கிட்டத்தட்ட 45 கி.மீ., தொலைவுள்ள இச்சாலை 2 ஆண்டுகளில் விரிவாக்கம் செய்து பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் கதவணி அருகே சுங்கச்சாவடி அமைக்க ரூ.1.89 கோடி ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 கி.மீ., தொலைவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 கி.மீ., தொலைவும் கொண்ட இச்சாலை சீரமைப்புப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்’’இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் பேசும்போது, ‘‘மாநிலத்திலேயே முன்னோடி மாவட்டமாக திருப்பத்தூர் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் புதிதாக தொழிலாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடியில் மத்திய காலணி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டிக்கு அடுத்த படியாக வாணியம்பாடியில் மத்திய காலணி பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். இப்பயிற்சி மையம் மூலம் இளைஞர்கள், பெண்கள் நிறைய பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

அதேபோல, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’. என்றார். இந்நிகழச்சியில், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் முருகன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் வெங்கடேசன், ஆம்பூர் சர்க்கரை ஆலைத் தலைவர் மதியழகன், முன்னாள் ஊராட்சி குழுத் தலைவர் லீலாசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x