

அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை நமச்சிவாயம் நாளை ராஜிநாமா செய்து விட்டு டெல்லியில் பாஜக தேசியத்தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2016 -ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அப்போது மாநிலத்தலைவராக இருந்த நமச்சிவாயம் முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார்.
அதையடுத்து நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார். கட்சி தரப்பு அவரை சமாதானப்படுத்தியது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் கலால் அமைச்சராவும், மாநிலத்தலைவராகவும் இருந்தார். இச்சூழலில் மாநிலத்தலைவர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
அதையடுத்து அவர் தொடர்ந்து முழு அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏப்ரல் மாதம் தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தென் மாநிலங்களில் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதில் யூனியன் பிரதேசமான புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது
இதில் புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் முதல்வர் நாராயணசாமிக்கு அடுத்த 2-வது அமைச்சராக பதவி வகிக்கும் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்,வேட்பாளர் பிரதிநிதிகள் சிலரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பாஜக வட்டாரங்களிலும், நமச்சிவாயம் ஆதரவாளர்களிடமும் விசாரித்தபோது, "பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா வருகிற 29ம் தேதி புதுவை வருவதாக இருந்தார். காங்கிரஸில் இருந்து வெளியேற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் நட்டாவின் புதுச்சேரி பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாஜகவில் சேர உள்ளோரின் தயக்கத்தை உடைக்க நமச்சிவாயத்தை முதற்கட்டமாக கட்சியில் இணைய பாஜக தலைமை கோரியுள்ளது.
இதையடுத்து தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதைத்தொடர்ந்து, நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை நாளை (திங்கட்கிழமை) ராஜினாமா செய்து முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோரிடம் கடிதம் கொடுக்கிறார். அடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்திற்கு அனுப்புகிறார்.
தொடர்ந்து டெல்லி செல்லும் அவர் வருகிற 27ம் தேதி தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நமச்சிவாயம் சந்தித்துப் பேசுகிறார்
புதுவை திரும்பும் அவர் வருகிற 31ம் தேதி புதுச்சேரி வரும் தேசியத்தலைவர் நட்டா தலைமையில் ஏஎப்டி மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை பா.ஜனதாவில் இணைக்கிறார்" என்று குறிப்பிட்டனர்.