Last Updated : 24 Jan, 2021 05:08 PM

 

Published : 24 Jan 2021 05:08 PM
Last Updated : 24 Jan 2021 05:08 PM

பாஜக டுபாக்கூர் கட்சி; அக்கட்சி கூட்டணிக்கு போகிறவர்கள் காணாமல் போய்விடுவார்கள்: முதல்வர் நாராயணசாமி

பாஜக டுபாக்கூர் கட்சி. அக்கட்சியுடன் கூட்டணிக்கு போகிறவர்கள் காணாமல் போய்விடுவார்கள். புதுச்சேரி மட்டுமல்ல தமிழகத்திலும் கூட ஒரு இடம் வெற்றி பெற முடியாது என்று முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டார்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை துவங்கியது, மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்பி வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலத்தலைவராக இருந்த அமைச்சர் நமச்சிவாயம் கட்சியிலிருந்து விலக உள்ள சூழலில் இக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கந்தசாமி ராகுலை சந்திக்க சென்றதால் அவர் பங்கேற்கவில்லை.

எம்எல்ஏக்கள் பலரும் பங்கேற்கவில்லை. தொடக்கத்தில் பேசிய நிர்வாகிகள் ஆட்சிமீதும், அமைச்சர்கள மீதும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏ கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை- இந்த ஆட்சியால் எந்த விதமான பயனோ பலனோ கிடைக்கவில்லை என குறிப்பிட்டு பேசியதால் வாக்குவாதம் கூட்டத்தில் ஏற்பட்டது.

இச்சூழலில் இக்கூட்டத்தில் மதியமே முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசியதாவது:
”கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினோம். புதுச்சேரி சூழலை எடுத்து கூறினோம். அவர் வரும் பிப்ரவரி மாதம் புதுச்சேரி வருவதாக கூறினார். தேர்தலுக்கு முன்பாக ஒரு முறையும், தேர்தல் சமயத்தில் ஒரு முறையும், காரைக்காலுக்கு ஒரு முறையும் என 3 முறை வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். தற்போது புதுவையில் காங்., - திமுக கூட்டணி உள்ளது. நம்முடன் மதசார்பற்ற அணிகளையும் ஒருங்கிணைத்துள்ளோம்.

புதுச்சேரியை பொறுத்தவரை இன்று வரை திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. திமுக தலைவர்கள் இங்கு வந்து பேசுகையில், சில கருத்துகளை கூறியிருக்கிறார்கள். ஆனால், நம்மை பொறுத்தவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோர் எந்த முடிவை எடுக்கிறார்களோ, அந்த முடிவுக்கு கட்டுப்படுவோம்.
கட்சியில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதனை அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு இல்லாத குடும்பமோ, மாநிலமோ, மத்திய அரசோ, நாடுகளோ கிடையாது. கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.

பாஜக என்ற டுபாகூர் கட்சி உள்ளது. அந்த கட்சியின் வேலையே நம்மை எதிர்த்து போராட்டம் நடத்துவது, திட்டுவதுதான். புதுவையில் ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது பிரதமர் மோடி. ஆளுநர் மாளிகை பாஜக தலைமை அலுவலகமாக செயல்படுகிறது. நாங்கள் அனுப்பும் கோப்புக்கு ஒப்புதல் கொடுப்பதில்லை. இரட்டை வேடம் போடும் பாஜகவின் ஜம்பம் புதுவையில் பலிக்காது. புதுச்சேரி மட்டுமல்ல தமிழகத்திலும் கூட ஒரு இடம் வெற்றி பெற முடியாது.புதுவையிலிருந்து பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும்.

கிரண்பேடி புதுவையில் இருப்பதுதான் நமக்கு நல்லது. அவர் இருந்ததால்தான் மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுபோல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும். புதுவையை பொறுத்தவரை தற்போதுள்ள சூழலில் பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள். அவர்களுடன் கூட்டணி போகிறவர்கள் காணாமல் போய்விடுவார்கள் ”என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x