Published : 24 Jan 2021 12:22 PM
Last Updated : 24 Jan 2021 12:22 PM

சிவகங்கை அருகே கம்பீரமாக நிற்கும் 100 ஆண்டுகளை கடந்த வில்லிப்பட்டி நெற்களஞ்சியம்

சிவகங்கை அருகே 100 ஆண்டுகள் கடந்து இன்றும் வில்லிப்பட்டி நெற்களஞ்சியம் கம்பீரமாக நிற்கிறது. வில்லிப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான முறையில் குளிர்சாதன நெற்களஞ்சியம் கட்டப்பட்டுள்ளது. தானியங்கள் பாதிக்காமல் இருக்க ஒரே சீதோஷ்ண நிலை இருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. கட்டடத்தின் தளமே தரையில் இருந்து ஐந்தடி உயரத்துக்கு மேல் உள்ளது. தளம் 100 அடி நீளம், 36 அடி அகலம் கொண்டது. உட்பகுதியில் 6 அறைகள் உள்ளன. அறைகளுக்கு மேல் மச்சு (மாடி) கட்டி, ஓட்டு கூரை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து வில்லிப்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:

தானியங்களைச் சேமிக்க சாதாரண மக்கள் மண் குதிரையும், மன்னர்கள் 'சேகரம் பட்டறை' கிடங்குகளையும், பெரும் நிலச்சுவான்தாரர், ஜமீன்தார்கள் களஞ்சியங்களையும் பயன்படுத்தினர். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஜமீன் தார் இங்குள்ள நெற்களஞ்சியத்தை கட் டினார். இந்த களஞ்சியம் நீர்த்த சுண்ணாம்பு, பனைவெல்லம், கலச்சிக்காயை செக்கில் அரைத்துக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத் தளத்துக்கு கீழே மூன்று அடி அகலம், மூன்று அடி உயரம் கொண்டு இரண்டு சுரங்கங்கள் உள்ளன.

தேக்கு மரச் சட்டங்கள் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை. அவற்றை 48 அழகிய கல் துாண்கள் தாங்குகின்றன. இங்கு 100 க்கும் மேற்பட்டோர் எப்போதும் வேலை செய்துள்ளனர். இங்கு ஏழைகளுக்கு சமையல் செய்து அன்னதானமும் வழங்கி வந்துள்ளனர். ஒரு பகுதியில் பாடசாலையும் நடந்து வந்துள்ளது. கடந்த 1964-ம் ஆண்டு புயலில் ஊரே தத்தளித்தபோது, அனைவருக்கும் அடைக்கலம் அளித்தது இந்த களஞ்சியமே. இந்த களஞ்சியத்தை பார்வையிட ஏராளமானோர் வருகின்றனர். இந்த களஞ்சியத்தை தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x