

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலையில் உள்ள பாலத்தில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள நத்தம் சாலை போக்குவரத்து அதிகமுள்ள சாலை, தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் சென்று வருகின்றன. நாகல்நகர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டபட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அவ்வப்போது நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின் றனர். இந்த பணிகள் தரமின்றி உள்ள தால் அடிக்கடி சாலை சேதமடைந்து வருகிறது.
இப்பாலம் முடிவடையும் இடத்தில் உள்ள மெகா பள்ளம் வாகன ஓட்டிகளை காவு வாங்க காத்துள்ளது. இரவு நேரத்தில் இந்த பகுதியில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த மெகா பள்ளம் தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. இந்த பள்ளத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த நுகர்வோர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் மெகா பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியில் வாகனங்களில் சென்றுவருபவர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.