Published : 24 Jan 2021 11:33 AM
Last Updated : 24 Jan 2021 11:33 AM

வைகை அணையில் 71 அடி உயரம் தேக்கப்பட்ட தண்ணீர்: நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின

பின்னத்தேவன்பட்டியில் ஆக்கிரமிப்பு விளைநிலங்களில் வைகை அணை நீர் தேங்கியுள்ளது.

ஆண்டிபட்டி

13 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை முழுக் கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்குள் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்த நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. மொத்தம் 6,091 மில்லியன் கனஅடி நீரை இங்கு சேமிக்க முடியும். இந்த அணை மூலம் 5 மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.

வடவீரநாயக்கன்பட்டி, சொக்கத் தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், மதுராபுரி, அழகாபுரி, அம்மாபுரம், சர்க்கரைப்பட்டி, சாவடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வைகை அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்குள் அமைந்துள்ளது. நீர்வரத்து அதிகளவில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக 69 அடி வரையே நீர் தேக்கப்பட்டு வந்தது. இதனால் அரப்படித்தேவன்பட்டி, பின்னத் தேவன்பட்டி, குன்னூர், காமக்காபட்டி பகுதிகளில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் நீர்தேக்கப்படாததால் நிலங்களாகவே இருந்து வந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் இந்த இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

69 அடிக்கு மேல் நீர் தேக்கும்போது தான் இப்பகுதியில் தண்ணீர் சேகரமாகும். எனவே விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் முழுக் கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. கொள்ளளவும் 5 ஆயிரத்து 821 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர் ஆக்கிரமிப்புப் பகுதிகள் வரை தேங்கத் தொடங்கியது. தற்போது நெல், வெண்டை, கத்தரிக்காய், மிளகாய் போன்றவற்றை ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் அழுகிவிட்டன. பல வயல்கள் தொடர்ந்து நீரிலேயே மூழ்கிக் கிடக்கின்றன.

விவசாயத் துறையினர் கூறுகையில், இது ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் விவசாயிகள் இழப்பீடு கோர முடியாது. 71 அடி வரை நீர் தேக்கும்போதுதான் இங்கு அணை நீர் தேங்கும். இதனால் மழைக்காலம் தவிர்த்து மற்ற காலங்களில் இப்பகுதியில் உள்ளவர்கள் இங்கு பயிரிட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையினர்தான் கண்காணித்து இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொதுப்பணித்துறையினர் இதுகுறித்து கூறுகையில், சம்பந்தப்பட்ட விளைநிலங்கள் அணை கட்டும்போதே கையகப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். இதற்கான இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. அதில் சிலர் இன்னமும் ஆக்கிர மித்து விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வப்போது ஆய்வுசெய்து எச்சரித்து வருகிறோம் என்றனர்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள கோடை காலங்களில் ஆக்கிரமிப்பு விவசாயிகள் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் அணை நீரை நம்பியுள்ள விவசாய பகுதிகளுக்கு உரிய நீர் சென்றடைவதில்லை. எனவே ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x