Published : 24 Jan 2021 11:22 AM
Last Updated : 24 Jan 2021 11:22 AM

பருவம் தவறி பெய்த மழையால் சோளக்கதிர்களில் துளிர்விட்ட இளந்தளிர்கள்: தேனி மாவட்ட மானாவாரி விவசாயிகளின் பரிதாப நிலை

தேனி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையினால் சோளம், கம்பு, தட்டை உள்ளிட்ட மானாவாரி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பூஞ்சானம் ஏற்பட்டு கதிர்களிலேயே இளந்தளிர் முளைத்து விட்டதால் இவற்றை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேனி, போடி ஒன்றியங்களில் அதிகளவில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிவலிங்க நாயக்கன்பட்டி, கொடு விலார்பட்டி,தாடிச்சேரி, தப்புக்குண்டு, கோட்டூர், சீலையம்பட்டி, தர்மாபுரி, அடைக்கம்பட்டி, கண்டமனூர், டி.மீனாட்சிபுரம், தேக்கம்பட்டி, எம்.சுப்புலாபுரம், பந்துவார்பட்டி, மரிக்குண்டு, ஏத்தக்கோவில், மேக்கிழார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விளைநிலங்கள் அதிகம் உள்ளன. ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இப்பகுதியில் மக்காச்சோளம், கம்பு, துவரை, தட்டைப்பயறு விவசாயம் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதனால் விளைந்த பயிர்களை அறுவடை செய்யவோ, அவற்றை களங்களில் பத்திரப் படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சோளம் உள்ளிட்ட கதிர்களில் தொடர் ஈரம், குளிர் போன்றவற்றினால் பூஞ்சானம் ஏற்படத் துவங்கியது. வெண்மை நிறமாக இருந்த சோள மணிகள் பச்சை, கருப்பு நிறமாக மாறிவிட்டது. அதன்மேல் மென்படலமாக படிந்து நெடி அடிக்கத் துவங்கியுள்ளது. பெரும்பாலான வயல்களில் சோளக்கதிர்களில் மழைத்துளி தேங்கி இளந்தளிர்களுடன் முளைக்கத் துவங்கி விட்டன.

கதிரே தெரியாத அளவிற்கு இளஞ்செடிகள் அதிகம் விளைந்து கிடப்பதால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். சோளத்தைப் பொறுத்தளவில் நிறம், தடிமன் போன்றவை விலையைத் தீர்மானிக்கின்றன. தற்போது இதன் தன்மை மாறிவிட்டதால் வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். வயலிலே இருந்தால் கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் இவற்றை களங்களில் குவிந்து வருகின்றனர். இதுகுறித்து அடைக்கம் பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற விவசாயி கூறுகையில், 2 ஏக்கரில் மானா வாரி நிலத்தில் சோளம் விதைத் திருந்தேன். பொதுவாக ஏக்கருக்கு 50 குவிண்டால் விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டும் விளைச்சல் நன்றாக இருந்தது.

நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால் பருவம் தவறி பெய்த மழையினால் சோளக்கதிர்கள் பூஞ்சானத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கருத்துப்போய் முளைத்து விட்டன. இதனால் வியாபாரிகள் இவற்றை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இவற்றை அறுத்து களத்தில் வைத்துள்ளோம். இதனை கால்நடைகளுக்குத்தான் தீவனமாக வழங்க வேண்டும். அல்லது கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வர் எனவே விவசாயத்துறை உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார். தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எம்.சீனிராஜ் கூறுகையில், இவற்றை விளைவிக்க 3 முதல் 4 மாதம் வரை ஆகும். 3 உழவு செய்ய வேண்டும். இதற்கு ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை செலவாகும். பாத்தி கட்ட ரூ.2 ஆயிரம், விதை ரூ.10 ஆயிரம், களை, மருந்துச் செலவு என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகும். தண்ணீர் வசதி இல்லாததால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த மானாவாரி நிலங்களில் விவசாயம் நடைபெறும்.

இந்த ஆண்டு நன்கு விளைச்சல் இருந்தும் தொடர் சாரல் மழையினால் பயிர்கள் முற்றிலும் பாதிப் படைந்துள்ளது. நஷ்ட ஈடு கேட்டு ஆட்சியரிடம் மனுக் கொடுத்திருக்கிறோம். விலை குறைவாக இருக்கும் நேரங்களில் விவசாயிகள் இருப்பு வைத்து விற்பனை செய்வர். பூஞ்சான பாதிப்பு உள்ளதால் தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லை. விலை குறைவு என்றாலும் கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றார். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த புகார் மனுக்களின் அடிப்படையில் விவசாயத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களை கணக்கெடுக்கத் துவங்கியுள்ளனர். கொடுவிலார்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, தாடிச்சேரி, காட்டுநாயக்கன்பட்டி, போடி, ஆண்டிபட்டியில் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கபட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றுடன் அருகில் உள்ள வட்டார விவசாய அலுவலகங்களில் மனு கொடுக்கலாம். இம்மாத இறுதிக்குள் விபரங்கள் தொகுக்கப்பட்டு ஆட்சியருக்கு அனுப்பப்படும். எனவே விவசாயிகள் இது குறித்த ஆவணங் களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். எதிர்பாராத நேரத்தில் பெய்த தொடர்மழை தேனி மாவட்ட மானாவாரி பயிர்களை பெரிதும் பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x