Published : 24 Jan 2021 11:07 AM
Last Updated : 24 Jan 2021 11:07 AM

ஒட்டன்சத்திரம் அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு இடையகோட்டை நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் நிரம்பியது

13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம்.

ஒட்டன்சத்திரம் 

ஒட்டன்சத்திரம் அருகே இடைய கோட்டையில் உள்ள நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் அப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஜனவரி 15-ம் தேதி வரை தொடர் மழை பொழிவு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கின.

கடந்த சில ஆண்டுகளாக மழைக் காலத்தில் கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, மருதாநதி அணைகள் மட்டுமே நிரம்பிவந்தன. இந்த ஆண்டு சராசரியை விட கூடுதல் மழை காரணமாக பழநி அருகே யுள்ள குதிரையாறு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணையும் நிரம்பியது. வேடசந்தூர் அருகேயுள்ள குடகனாறு அணையும் 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.

இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகாலமாக மிகக் குறைந்த அளவு தண்ணீரே அதுவும் நேரடி மழை நீர் மட்டுமே ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்தில் தேங்கிவந்த நிலையில், 13 ஆண்டு களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் அணை நிரம்பியது. இதன் மொத்த உயரம் 39.37 அடி ஆகும். இதனால் இப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தண்ணீர் பிரச்சினையின்றி விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கை கிராம விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை இன்னும் ஓராண்டுக்கு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் செல்வதை இதுவரை பார்த்திராத சிறுவர்கள் ஆச்சரியத்துடன் தற்போது பார்த்து மகிழ்கின்றனர். நங்காஞ்சி ஆறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி வழிவது, ஆற்றில் தண்ணீர் செல்வது ஆகியவற்றை ஏதோ வரலாற்று நிகழ்வை போலவே இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். விவசாயி ராமசாமி கூறுகையில், எங்கள் சிறுவயதில் ஆண்டுதோறும் ஆற்றில் தண்ணீர் செல்லும், பருவம் தவறாமல் மழை பெய்ததுதான் இதற்கு காரணம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மழை முறையாக பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் செல்லவில்லை. நங்காஞ்சி ஆற்றின் தொடக்கத்தில் மலையில் கட்டப்பட்டுள்ள பரப்பலாறு அணையே ஆண்டுதோறும் நிரம்புவதில்லை.

அந்த அணை நிரம்பி தண்ணீர் வெளியேறினாலும் ஆற்றில் வரும் வழியில் உள்ள கண்மாய், குளங்களை நிரப்ப தண்ணீரை திருப்பி விட்டுவிடுவர். அணையில் பாதி கொள்ளவு கொண்ட சடையன்குளம் என்னும் பெரிய அளவிலான குளம் உள்ளது. இவற்றையெல்லாம் நிரப்பிவிட்டு கடந்து நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவது என்பது கடந்த சில ஆண்டுகளாக சாத்தியமில்லாததாகவே இருந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை தற்போதுதான் முதன்முறையாக நிரம்பியுள்ளது. இது விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு தண்ணீர் பிரச்சனை இன்றி நம்பிக்கையுடன் விவசாயம் செய்யலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x