Last Updated : 24 Jan, 2021 10:14 AM

 

Published : 24 Jan 2021 10:14 AM
Last Updated : 24 Jan 2021 10:14 AM

வாரம் ஒரு கிராமம் அறிவோம்: கன்னிமார் தெய்வத்தை கைகூப்பி தொழுவோம் - சி. முட்லூரில் ‘கன்னித் திருவிழா’

“தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் நீண்ட நெடிய பல்வேறு சமூக கூறுகளை உள்ளடக்கியது. வட்டாரங்கள் தோறும் இது மாறுபடும் என்பதைத் தாண்டி, ஒரே வட்டாரத்தில் உள்ள சிற்சில கிராமங்களுக்கு இடையிலும் மாறுபட்டு நிற்கிறது. நாட்டார் வழக்காற்றியலை நன்கு ஆராய்ந்தால் இது தெரியும்.’‘

- முதுபெரும் தமிழறிஞரும் மானிடவியல் ஆய்வாளருமான தொ.பரமசிவ னின் கூற்று இது. தொ.பரமசிவன் குறிப்பிடுவது போல ஒரு பண்பாட்டு நிகழ்வை தன்னகத்தே கொண்டிருக்கிறது சிதம்பரம் அருகேயுள்ள சி. முட்லூர் கிராமம். இக்கிராமத்தில் நடத்தப்படும் ‘கன்னித் திருவிழா’ மிகப் பிரசித்தம். 200 ஆண்டுகளைத் தாண்டி இத்திருவிழா நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் இங்குள்ள பெரியவர்கள்.

தங்கள் கிராமத்தில் பிறந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உரிய காலத்தில் நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டி, இந்தக் ‘கன்னித் திருவிழா’வை நடத்துகின்றனர் சி.முட்லூர் கிராமத்தினர். ஆண்டு தோறும் தை மாதம் 3-ம் நாள் இந்திரனுக்கு படையல் செய்து இந்த ‘கன்னித் திருவிழா’வை தொடங் குகின்றனர்.

‘கன்னி’யாக இருக்கும் அதாவது திருமணத்துக்கு தயாராக இருக்கும் இளம்பெண்கள், இளைஞர்கள் அன் றைய நாளில், கிராமத்தில் உள்ள 12 தெருக்களிலும் உள்ள முச்சந்தியில் 7 செங்கற்களை கன்னி தெய்வங்களாக நினைத்து நடுவர். அதோடு, மண் உடையார் (குயவர்கள்) வீடுகளில் இருந்து, தங்களின் வேண்டுதலுக்காக ஆண், பெண் உருவச் சிலைகளை வாங்கி வந்து அந்த வழிபாட்டில் வைப்பதுண்டு. அந்த இடத்தில் நாள்தோறும் விளக் கேற்றி படையல் செய்வார்கள்.

இதைச் செய்த 9-ம் நாள் அன்று அந்தந்த தெருக்காரர்கள் ஒன்று சேர்ந்து கன்னிமார்ச் சிலைகளுக்கு முன் (கன்னி சிலைகள்) பாரம்பரிய விளை யாட்டுக்களான கும்மி, கோலாட்டம், சிலம்பாட்டத்துடன் விழாவை நடத்துவார்கள். அன்று இரவு முழுவதும் படையல் செய்வார்கள். மறு நாள் (10-வது நாள்) 12 தெருக்களிலும் உள்ள ஆண், பெண் சிலைகளை (கன்னி சிலைகள்) மேள தாளம் முழுங்க எடுத்துச் சென்று வெள்ளாற்றில் கரைப்பார்கள்.

தங்கள் குழந்தைகளின் உடல் கோளாறுகள் தீர வேண்டிக் கொண்ட குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகளை சாம்பிராணி சட்டி மற்றும் கலசங்களை இந்நிகழ்வின் போது எடுத்து வரச் செய்வதுண்டு. இந்த ‘கன்னித் திருவிழா’வில் பங்கேற்கும் இளையோருக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது இக்கிராமத்தினரின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சி.முட்லூர் கிராமத்தில் இருந்து திருமணமாகி சென்றவர்கள், அவர்களின் உறவினர்கள் இந்த ‘கன்னித் திருவிழா’வில் கலந்து கொண்டு இறை வனுக்கு நன்றி செலுத்துவதும் உண்டு.

இப்படியாக, ஒரு வாழ்வியல் திருவிழாவாக இக்கிராம மக்களுடன் இரண்டற கலந்து நிற்கிறது இத்திருவிழா. வெள்ளாற்றின் கரையோரம் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தோட்டப் பயிர்கள் குறிப்பாக மலர் சாகுபடி அதிகம் நடக்கிறது. எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள் ஆங்காங்கே சில கிராமங்களில் மண்ணில் புதைந்து, வாழ்வியல் நெறியாக வளர்ந்து நிற்கிறது. அதற்கான ஆகச் சிறந்த உதாரணம் சி.முட்லூரின் ‘கன்னித் திருவிழா’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x