

நம் கடலூர் நகரின் பேருந்து நிலையத்திற்குச் செல்கின்ற பிரதானச் சாலையின் பெயர் ‘லாரன்ஸ் ரோடு’. கடலூரை நன்கு அறிந்த அனைவருக்கும் இந்தச் சாலை அத்துப்பிடி. வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள், உணவகங்கள் எனப் பல்வேறு கடைகள் நிரம்பி எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த முக்கியச் சாலையில் நடந்து செல்லும் போதும், “லாரன்ஸ் ரோடு” என்ற பெயர்ப் பலகையைப் பார்க்க நேரும் போதும், “யார் இந்த லாரன்ஸ்?” என நம்மில் சிலருக்கு மனதில் கேள்வி எழும்.
ஆமாம், யார் இந்த லாரன்ஸ் எனக் கேட்கிறீர்களா. வாருங்கள்! கடலூரின் காலப்பெட்டகத்தை கொஞ்சம் பின்னோக்கிப் புரட்டிப் பார்ப்போம். அது 1748ம் ஆண்டு. கடலூர் நகரைப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. பாண்டிச்சேரிக்கும் கடலூருக்கும் இடையிலான கடல் பகுதியில் போர்க் கப்பல்கள் பல அணிவகுத்து வந்து கொண்டிருந்தன. ஆம். ஐரோப்பாவில் தொடங்கிய ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் சோழ மண்டலக் கடற்கரையையும் தொட்டிருந்தது.
அதற்குக் காரணம் ஐரோப்பாவில் தீராப் பகையுணர்வுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இங்கிலாந்தும், பிரான்சும் மெல்ல, மெல்ல இந்தியா நிலப்பரப்பில் தங்கள் ஆதிக்கத்தை விரிவடையச் செய்ய முயன்று கொண்டிருந்தன. கடலூரில் ஆங்கிலேயர்களும், பாண்டிச்சேரியில் பிரஞ்சுக்காரர்களும் காலூன்றியிருந்த கால கட்டம் அது. மேலும், 1746-ம் ஆண்டு சென்னையை ஆங்கிலேயரிடமிருந்து பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டதால், கடலூர் புனித டேவிட் கோட்டை தான் சோழ மண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக இருந்து வந்தது.
அதே சமயம், கர்நாடகப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த, ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகானின் மறைவிற்குப் பிறகு, ஐதராபாத் நிசாமின் மருமகன் சந்தா சாகிப் மற்றும் ஆற்காடு நவாப் அன்வர்தீன் முகமதுகான் ஆகிய இருவரும் கர்நாடக நவாபாக முயன்றனர். அந்த இருவருக்குமிடையே பெரும் போர் மூண்டது.
குழம்பிய, குட்டையில் மீன் பிடிக்க தயாராகக் காத்திருந்தது போல், சந்தா சாகிபுக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியும் களமிறங்கியது. ஐரோப்பிய மண்ணில் நிலவிய பகையுணர்வும், இந்திய மண்ணில் உருவான பகையுணர்வும் ஒரு சேர இணைந்து உருவாகி 1746 முதல் 1748 வரை நடைபெற்ற இந்தப் போருக்கு முதலாம் கர்நாடகப் போர் என்று பெயர்.
அட விடுங்க… இதற்கும் இந்த லாரன்ஸ் ரோடுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அதே வரலாறை சற்றே தொடர்வோம்… பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுநர் ஜோசெப் பிரான்சுவா தூப்ளே 800 ஐரோப்பிய வீர்ர்கள் மற்றும் 1,000 இந்தியச் சிப்பாய்கள் கொண்ட பெரும் கடற்படையோடு கடலூரை முற்றுகையிடுகிறார். 17 ஜூன் 1748 காலையில் இந்த முற்றுகையைத் தொடங்கிய போது, நமது பலத்தின் முன்னால் ஆங்கிலேயர்களால் தாக்குப் பிடிக்க முடியாது எப்படியும் ஆங்கிலேயர் வசம் இருக்கும் கடலூர் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றிவிடுவோம் என பிரெஞ்சுக்காரர்கள் உறுதியாக நம்பினர்.
ஆனால், அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி, வெறும் 400 வீரர்களை வைத்துக் கொண்டு மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு, பிரெஞ்சுக்காரர்களின் முற்றுகையை முறியடித்து, அவர்களை பாண்டிசேரிக்கு திரும்பி ஓடச் செய்தார் ஒரு ஆங்கிலத் தளபதி. அன்று மட்டுமல்ல, பல பிரெஞ்சுத் தாக்குதல்களில் இருந்து கடலூரைக் காத்து நின்ற அந்த ஆங்கிலத் தளபதியின் பெயர் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இந்தியாவில் முதல் ஆங்கிலேய தலைமைத் தளபதியான, இந்திய ராணுவத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்ற மேஜர் ஜெனரல் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் பெயராலேயே இன்றவும் கடலூரின் பிரதானச் சாலை “லாரன்ஸ் ரோடு” என அழைக்கப்படுகிறது.
ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் 1697-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதியன்று இங்கிலாந்தின் ஹெரிபோர்டு என்ற ஊரில் பிறந்தார். 1727-ல் இங்கிலாந்து இராணுவத்தில் சேர்ந்த அவர் 1748-ல் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப் படைகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்த இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். ஒழுங்கற்று இருந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தை ஒழுங்குபடுத்தினார். சரியான இராணுவக் கட்டுப்பாடுகள் மற்றும் தர நிலை வரிசை கொண்டதாக இராணுவக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தினார். அதுவே, இந்தியாவில் நவீன இராணுவத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சிலகாலம், கடலூர் புனித டேவிட் கோட்டையின் ஆளுநராகப் பதவி வகித்த அவர், 1749-ல் தேவகோட்டையைக் கைப்பற்றினார். 1750-ல் பதவியை ராஜினாமா செய்து இங்கிலாந்திற்குத் திரும்பிய அவர், 1752-ல் லெப்டினன்ட் கலோனல் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவர் திருச்சிராப்பள்ளியை மீட்டதோடு, பாகூரில் பிரெஞ்சுப் படைகளை சிதறடித்து விரட்டினார். 1758-ல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை முற்றுகையிட்டபோது அதனைக் காத்து நின்றார். 1761-ல் மேஜர் ஜெனரல் ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இந்தியாவில் இருந்த அனைத்து ஆங்கிலக் கிழங்கிந்தியக் கம்பெனிப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1766-ல் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குச் சென்ற அவர், தனது 77-வது வயதில், 10 ஜனவரி 1775-ல் லண்டனில் இயற்கை எய்தினார். பின்னாளில் இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசை நிறுவுவதற்கு அடித்தளமிட்ட இராபர்ட் கிளைவிற்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாவும் இருந்தவர் இவரே. இருவரும் மிகுந்த நட்போடு இருந்தனர்.
ஒரு முறை இராபர்ட் கிளைவின் சேவையைப் பாராட்டி அவருக்கு வீரவாள் ஒன்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டபோது, “இதே போன்ற கவுரவம் மேஜர் ஜெனரல் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸூக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவரை மறந்து விட்டோம்” எனக் கூறி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். நம்மை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தினாலும், அவர்களின் ஆதிக்கத்தின் பரிசாக கடலூர் நகரத்தின் ஒரு பிரதானச் சாலையும் ஒரு ஆங்கிலேயரின் பெயரை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.