Last Updated : 24 Jan, 2021 10:01 AM

 

Published : 24 Jan 2021 10:01 AM
Last Updated : 24 Jan 2021 10:01 AM

விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுக்கும் தேர்தல் களம்: தொகுதியைப் பிடிக்க கட்சி நிர்வாகிகள் போட்டாப் போட்டி

தமிழகத்தில் கரோனா களேபரம் கட்டுக்குள் வந்து, பெரு மழையின் பெரும் பாடு ஓய்ந்து, தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, பிரதான இரு கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். ரத்தத்தின் ரத்தங்களோடு தாமரையின் தவப் புதல்வர்களும் கைகோர்த்து களம் காண விரைகின்றனர். கழக கண்மணிகளோ ஒரு புறம் காம்ரேட்டுகள், மறுபுறம் சிறுத்தைகள் என சீறிப் பாய்கின்றனர்.

பாட்டாளிகள் இடஒதுக்கீட்டை முன்நிறுத்தி கவனத்துடன் காய் நகர்த்தி வருகின்றனர். ‘மய்யத்தில் இருந்து நீதி தருகிறேன்’ எனச் சொல்பவரும் தீவிர பரப்புரையை முடித்து, அடுத்தக் கட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ‘தமிழரே நாம்’ என்போர் தஞ்சை மண்டலத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டனர்.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள், தலைமையிடம் இருந்து சீட் கேட்டுப் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீட் பெறுவதில் கடும் போட்டாப் போட்டி நிலவுகிறது. கூட்டணி குறித்த தெளிவான ஒரு நிலைப்பாடு வராத நிலையில், நமது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்று தற்போதைய கூட்டணியின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்

விழுப்புரம் தொகுதியில் இரு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் இத்தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதே நேரம் இதேர்தலில் மயிலம், செஞ்சி தொகுதியிலும் போட்டியிடலாமா என ஆலோசித்து வருகிறாராம். அப்படி சி.வி.சண்முகம் வேறு தொகுதிக்கு மாறினால் அதிமுக சார்பில் நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி, ( இவர் இரு முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்), வளவனூர் முருகவேல், கண்டமங்கலம் ராமதாஸ் ஆகியோருக்கு அடுத்தகட்ட வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

‘அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திமுகவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ்க்கு முதல் வாய்ப்பு என்கிறார்கள் அக்கட்சியினர். ஒருவேளை தலைமையின் உத்தரவின்படி பொன்முடியும் போட்டியிடலாம். முன்னாள் எம்பி லட்சுமணனுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

‘இத்தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக தலைமையிடம் கேட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் சீனிவாசகுமார், மாநில துணைத் தலைவர் குலாம்மொய்தீன் ஆகியோர் கட்சித் தலைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வானூர் (தனி)

வானூர் தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் சக்கரபாணிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்கினால் ஏற்கெனவே இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மொ.ப.சங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
திமுகவைப் பொருத்தவரை மாவட்ட துணை செயலாளரான முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

திண்டிவனம் (தனி)

திண்டிவனம் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்க வாய்ப்பு அதிகம். அதே போல அதிமுக கூட்டணியில் பாமக அல்லது தேமுதிகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. வேட்பாளர்கள் யார் என்பதில் இக்கட்சியினரிடையே இதுவரையில் முடிவாகவில்லை.

மயிலம்

மயிலம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடாதபட்சத்தில் இத்தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மறைந்த அண்ணாதுரையின் மனைவி ஆனந்தி, செஞ்சி ராமசந்திரனின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. திமுகவை பொருத்தவரை திமுக தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, தற்போதைய எம்எல்ஏ மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது.

செஞ்சி

செஞ்சியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மஸ்தான், மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன்,ஏற்கெனவே இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த செஞ்சி சிவா ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினால் காங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் ரமேஷ், ரங்கபூபதி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றனர். அதிமுகவை பொறுத்தவரை இத்தொகுதி கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி பாமகவிற்கு ஒதுக்கினால் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்பி லட்சுமணன், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், இளைஞரணி பாலாஜி, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபு ஜீவானந்தம் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், எம்எல்ஏ முத்தமிழ் செல்வன், பிகே சுப்பிரமணியன் ஆகியோரும், பாமக சார்பில் மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவகுமார் ஆகியோரும் களம் காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட வாய்ப்பு அதிகம். மேலும் மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ ஏஜி சம்பத் ஆகியோரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். பொன்முடி விழுப்புரத்தை விட்டு ஒதுங்கும்பட்சத்தில் இவர்களில் ஒருவர் களத்தில் இறங்குவர். அதிமுக சார்பில் நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஏபி பழனி, இளங்கோ ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கினால் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் போட்டியிட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x