Last Updated : 24 Jan, 2021 09:52 AM

4  

Published : 24 Jan 2021 09:52 AM
Last Updated : 24 Jan 2021 09:52 AM

‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்..!’

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு ராமையா,சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார்.
வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். ஆன்மிகத் தேடலில் தன்னை கரைத்துக் கொண்ட வள்ளலாருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. பெற்றோரின் வற்புறத்தலால் தன் சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்தார். பின் மனைவியையும் ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளியுள் ளார் வள்ளலார். அவர் நமக்காக அருளிய பாடல்கள் ‘திருவருட்பா’ என்று போற்றப்படுகிறது.

ஜீவ காருண்ய நெறி

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..!’ என்று கூறிய வள்ளலார், பல்வேறு ஜீவ காருண்ய நெறிக ளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தார். ‘இறைவன் ஒளி வடிவில் உள்ளார்’ என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் 1867ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். நமது ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் இந்த சத்திய ஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழியாக உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக் கும் ஐந்து படிகளையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம்.

ஜோதி தரிசனம்

கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தைப்பூசத்தன்று மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும். 7 வண்ணத் திரைகளுக்கும் அதன் தத்துவங்கள் வள்ளலாரால் அளிக்கப்பட்டுள் ளன. கருப்புத்திரை - மாயையை விலக்கும் (அசுத்த மாயா சக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத்திற்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயா சக்தி), பச்சைத் திரை - உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியா சக்தி), சிவப்புத் திரை - உணர்வுகளைச் சீராக்கும் (பராசக்தி), பொன்னிறத்திரை - ஆசைகளால் ஏற் படும் தீமைகளை விலக்கும் (இச்சா சக்தி), வெள்ளை திரை - ஞானசக்தி, 6 வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும்(ஆதி சக்தி). நடப்பாண்டில் நடைபெறுவது 150 வது தைப்பூ ஜோதி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடலூரில்  சத்திய ஞான சபையில் தைபூச விழாவையொட்டி கொடியேற்றப்படுகிறது. (கோப்பு படம் )

சமரச சுத்த சன்மார்க்கம்

ஏழை, எளிய மக்கள் பசியைப் போக்க சத்திய ஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார் வள்ளலார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்று வரை மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாம் யார்? நம் நிலை எப்படி பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம்?

என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியைக் கண்டறிந்தார் வள்ளலார். தாம் கண்டு அடைந்த வழியை எல்லோரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி அடைந்தார்.‘உயிர்களிடம் அன்பு செய், பசி போக்கு, தயவு காட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே’ என்ற வள்ளலாரின் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் உலகம் முழுவதும் பரவினால் பயங்கரவாதம் அழியும், உலகம் செழிப்படையும்.

வள்ளலார் தந்த வாழ்வியல் நெறிகள்

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். புலால் உணவு உண்ணக் கூடாது, எந்த உயிரையும் கொல்லக் கூடாது, சாதி, மதம், இனம், மொழி முதலில் வேறுபாடு கூடாது, இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும், எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், சிறு தெய்வ வழிபாட்டின், அவற்றின் பெயரால் பலி இடுதல் கூடாது, உயிர்களை துன்புறுத்தக் கூடாது, மதவெறி கூடாது இதுவே வள்ளலார் தந்த வாழ்வியல் நெறிகள்.

28-ம் தேதி தைப் பூசம்

ஆண்டு தோறும் தை மாதம் பூச நட்சதிரத்தன்று தைப் பூச திருவிழா வடலூர் சத்திய ஞான சபையில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் வரும் 27-ம் தேதி தைப் பூச கொடியேற்றம் நடக்கிறது. 28-ம் தேதி தைப்பூச நாளில் 7 திரைகள் விலக்கப்பட்டு ‘ஜோதி தரிசனம்’ காட்டப்படும். ஜோதி தரிசன நேரங்கள் காலை 6.00 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 29-ம் தேதி, காலை 5.30 மணி ஆகும். 30-ம் தேதி சனிக்கிழமையன்று மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திரு அறை தரிசனம் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x