

நடப்பாண்டு சம்பா பருவத்திற்கான நெல் அறுவடை தொடங்கியதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என இரு வாரங்களுக்கு முன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அறிவித்திருந்தார். தற்போது மழை நின்ற நிலையில், விவசாயிகள் அறுவடையை தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும், ஆட்சியர் அறிவிப்பின் படி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
“ஒவ்வொரு ஆண்டும் காலம் தாழ்த்தியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. வெளியில் உள்ள வணிகர்களுக்கு துணை போகும் வகையில் இந்த செயல்பாடு நடக்கிறது” என்கிறார் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சிவ சரவணன்.
இதுபற்றி கடலூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் தேன்மொழியிடம் கேட்டபோது, “மழை தற்போது தான் குறைந்திருக்கிறது. இதன் பின்னரே விவசாயிகள் அறுவடை செய்ய நேரிடும். 129 இடங்களில் நெல் கொள்முதல் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’‘ என்று தெரிவித்தார்.