

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்துவிலகி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும், அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தனது தொகுதியான வில்லியனூரில் ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாகவே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த செய்தியாளர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, தனது அடுத்தக் கட்ட நிலை குறித்து ஆதரவாளர்களிடம் நமச்சிவாயம் பேசினார். கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் உரியமரியாதை தனக்கு அளிக்கப் படவில்லை.
தனது துறைகள் மீதான பணி களில் முதல்வர் தலையிட்டு தடை யாக இருந்து வருகிறார் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது. அரைமணி நேரத்தில் இக்கூட்டம் நிறைவடைந்தது. வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயத்திடம் செய்தியாளர் கள், இந்த திடீர் ஆலோசனை குறித்து கேட்டதற்கு ‘‘நான் தொடர்ந்து தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகி றேன்’’ என்றார். ‘பாஜகவுக்கு நீங்கள் செல்வதாக தகவல் வருகிறதே!’ என்ற கேட்டதற்கு, ‘‘இது வரை அது போன்று இல்லை’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.