Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

5 மாவட்ட பழங்குடியினர் ஐடிஐ.க்களை மேம்படுத்த டைட்டன் நிறுவனத்துடன் வேலைவாய்ப்புத் துறை ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

கோவை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல். நீலகிரி மாவட்டபழங்குடியினருக்கான அரசு ஐடிஐ.க்களை மேம்படுத்த முதல்வர் பழனிசாமி முன்னிலையில், டைட்டன் நிறுவனத்துடன் வேலைவாய்ப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு நவ. 28-ம் தேதி,திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழாவில், வாணியம்பாடியில் தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்த புதிய பல்நோக்குத் திறன் மேம்பாட்டு மையம் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமிஅறிவித்தார். அதன்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், தோல் பதனிடும் தொழிலை மேம்படுத்தும் வகையில், வாணியம்பாடியில் உள்ளசிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான 1.15 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும்மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில், முதல் கட்டமாக ரூ.6.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்குத் திறன் மேம்பாட்டு மையத்தை, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் ஆண்டுதோறும் 2 ஆயிரம் பேர் தோல் பதனிடும் பிரிவில் உயர் திறன் பயிற்சி பெற்றுவாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.1.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய கட்டிடம், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘மெஷினிஸ்ட்’ என்ற புதிய தொழில் பிரிவுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை, பணிமனை கட்டிடம், சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீஷியன் மற்றும் ஏசி மெக்கானிக் ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டிடம் எனரூ.9.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

முதல்வர் முன்னிலையில், கோவை - ஆனைகட்டி, திருவண்ணாமலை - ஜமுனாமரத்தூர், சேலம் - கருமந்துறை, நாமக்கல் -கொல்லிமலை, நீலகிரி - கூடலூர்ஆகிய இடங்களில் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்டுள்ள அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர்களின் திறன், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்புத் திறன், தொழிற்பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த, தமிழக அரசின்வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் டைட்டன் நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோஃபர் கபீல், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுதீன், தொழில்துறை செயலர் நா.முருகானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மேலாண் இயக்குநர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x