

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 3 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.118 கோடி முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4.7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் பால் தினகரன். ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
28 இடங்களில் சோதனை
சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைமை அலுவலகம், பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் எதிரே உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ கட்டிடம், அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் வீடு, தாம்பரத்தில் உள்ள சீசாஅறக்கட்டளை, கோவை காருண்யா பல்கலைக்கழகம், கோவையில் உள்ள காருண்யா பள்ளி அலுவலகங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என 28 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
‘இயேசு அழைக்கிறார்’ அமைப்புக்கு வந்துள்ள வெளிநாட்டு பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதும், இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலேயே கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதும், வெளிநாட்டில் பெறப்பட்ட நிதியை வெளிநாட்டிலேயே பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.
பல நிறுவனங்களில் முதலீடு
3 நாள் சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், கணக்கில் காட்டாமல் பல்வேறு நிறுவனங்களில் ரூ.118கோடி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கோவை காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4.7 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அடுத்த வாரம் விசாரணை
இதைத் தொடர்ந்து, பால் தினகரனுக்கு வருமான வரித் துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கனடாவில் இருக்கும் அவர், அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரியவந்துள்ளது. அவர் சென்னை வந்ததும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ளது.