மருத்துவப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் காலி இடங்களை மறைப்பதாக வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநரகம் பதில் அளிக்க உத்தரவு

மருத்துவப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் காலி இடங்களை மறைப்பதாக வழக்கு: மருத்துவக் கல்வி இயக்குநரகம் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலி இடங்கள் மறைக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குநரகம் நாளைக்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் மதுரை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் பிஎஸ்கே தங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காது, மூக்கு, தொண்டை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு கடந்த 1996-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன். தற்போது 20 ஆண்டுகால பணியை நிறைவு செய்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் பதவி உயர்வுக்கான பணியிட மாறுதல்கலந்தாய்வில் காலி இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. உதாரணமாக காது, மூக்கு, தொண்டை பிரிவில் 14 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கலந்தாய்வு பட்டியலில் 9 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்று இருந்ததால் விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்றேன். ஆனால் புதுக்கோட்டை, தேனிமருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் மறைக்கப்பட்டதால் அந்த கல்லூரிகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.

எனவே, மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக் கான பதவி உயர்வு இடமாறுதலுக்கான காலி இடங்களைமுறையாக அறிவித்து, கலந்தாய்வை மீண்டும் வெளிப்படையாக நடத்தி என்னைபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இந்த வழக்குவிசாரணை நடந்தது. அப்போது, அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் காலி இடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதற்கு, அரசு தலைமைவழக்கறிஞர் விஜய் நாராயண் மறுப்பு தெரிவித்தார். பிறகு, இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஜனவரி 25-ம் தேதிக்குள் (நாளை) பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in