

ஆத்தூரை ஆத்தூரை அடுத்த கூலமேட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, வாடிவாசல், காளைகள் ஓடும் தளம், பார்வையாளர் மாடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலம், நாமக்கல், பெரம்பலூர், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கூலமேடு கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் புருஷோத்தமன் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் அடங்கிய 52 பேர் அடங்கிய குழு, பரிசோதனை நடத்தி, தகுதியான 666 காளை, களம் இறங்க அனுமதித்தனர்.
இதேபோல், மருத்துவர்கள் அடங்கிய குழு, மாடுபிடி வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரிசோதனை, உடல் தகுதி சோதனை நடத்தினர். அவர்களில் 325 வீரர்கள் களம் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கூலமேடு சுற்று வட்டார மக்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண குவிந்திருந்சனர். 480 போலீஸார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில், மாவட்ட எஸ்பி., தீபா காணிகர், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் துரை, வட்டாட்சியர் அன்புசெழியன் ஆகியோர் முன்னிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி, கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
வாடிவாசல் வழியாக, கோயில் காளை வெளியேறிய பின்னர், பார்வையாளர்களின் கரவொலிகளுக்கு நடுவே, முரட்டுக் காளைகள் ஒவ்வொன்றாக வெளியேறின. காளைகளை, மாடுபிடி வீரர்கள் துணிச்சலாகப் பாய்ந்து பிடிக்க முயன்றனர். சில காளைகள் வீரர்கள் பிடியில் அடங்கிய நிலையில், பல காளைகள் சீறிப்பாய்ந்து எவரின் பிடியிலும் சிக்காமல் ஓடிச்சென்றன.
காளைகளைப் பிடித்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், செல்போன், கட்டில், சில்வர் குடம், ரொக்கப்பரிசு என பலவித பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பல வித பரிசுகள் கிடைத்தன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில், 24 பேர் லேசான காயமடைந்தனர். 666 காளைகள், 325 வீரர்களுடன் நடந்த ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.