

லட்சத்தீவு அருகே தோணி கடலில் மூழ்கியதால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மாலுமிகளை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து, பல்வேறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு ‘மேசையா’ என்ற தோணி, கடந்த 19-ம் தேதி லட்சத்தீவு பகுதியில் உள்ள கவரத்தி தீவுக்கு சென்றது. தோணியில் நசரேன், சந்திரபோஸ், பவுல் உள்ளிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மாலுமிகள் இருந்தனர்.
தோணி 22-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் கல்பேனி தீவு அருகே சென்ற போது, திடீரென கடல் சீற்றத்தில் சிக்கியது. இதில், தோணிக்குள் கடல்நீர் புகுந்து மூழ்கத் தொடங்கியது. தோணியில் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடியில் உள்ள உரிமையாளரைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர்.
தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரின்ஸ்டன், கல்பேனியில் உள்ள துறைமுக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதன்பேரில், லட்சத்தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர், தோணியைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், முடியவில்லை.
இதையடுத்து, கடலோர காவல் படையினர் ரோந்து கப்பல் ‘சுஜித்’, சி-444 விரைவு படகு மற்றும் டோனியர் விமானம் ஆகியவற்றின் மூலம் தோணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்கு பிறகு மூழ்கும் கட்டத்தில் இருந்த தோணியை 22-ம் தேதி மாலை கண்டுபிடித்து, அதிலிருந்த 7 மாலுமிகளையும் 22-ம் தேதி இரவு 7 மணியளவில் பத்திரமாக மீட்டனர். ரூ.80 லட்சம் மதிப்பிலான தோணி கடலில் மூழ்கியது. 7 பேரும் கவரத்தி துறைமுகத்தில் நேற்று அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.