Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல அலுவலகத்தை இரண்டாக பிரித்து உத்தரவு

சென்னை

இந்து சமய அறநிலையத் துறைநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் சென்னை-1, சென்னை-2 என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மண்டல இணை ஆணையர்-1 அலுவலக கட்டுப்பாட்டில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், அயனாவரம் ஆகிய வருவாய் வட்டங்களில் உள்ளகோயில்களும், சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலக கட்டுப்பாட்டில் மயிலாப்பூர், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வருவாய் வட்டங்களில் உள்ள கோயில்களும் வரும்.

சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் இதுவரை ஆணையர் அலுவலக வளாகத்தின் 2-ம் தளத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது இடப் பற்றாக்குறை காரணமாக இந்த 2 அலுவலகங்களையும் புதிய இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 இணை ஆணையர் மண்டலஅலுவலகங்களுக்கும் தனித்தனியே புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டல இணைஆணையர்-1 அலுவலகம் பாடி, யாதவாள் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில் செயல்படும். சென்னை மண்டல உதவி ஆணையர் அலுவலகமும் இங்குசெயல்படும்.

சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலகம் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான பிள்ளையார் கோயில் தோட்டம் வணிக வளாக கட்டிடத்தில் செயல்படும். இந்த அலுவலகங்கள் வரும் 25-ம் தேதியில் இருந்து புதிய இடங்களில் செயல்படும்.

மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x