

மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 8 கிராம எல்லைகளில் 2,591.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வந்தவாசி வட்டத்தில் உற்பத்தியாகும் கிளியாற்றில் இருந்தும், உத்திரமேரூர் பகுதியில் உற்பத்தியாகும் நெல்வாய் மடுவு மூலமும் நீர் வருகிறது. மதுராந்தகம் ஏரியில் உள்ள 5 தலைப்பு மதகுகள் மூலம் 2,852.55 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன.
இந்த ஏரியில் இருந்து செல்லும் நீர், 30 ஏரிகளின் உயர்மட்ட கால்வாய்கள் மூலம் 4,751.90 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தமாக மதுராந்தகம் ஏரி மூலம் 7604.45 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. விளகாம், முருகஞ்சேரி, முன்னூத்திகுப்பம், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை, கடப்பேரி, மதுராந்தகம் ஆகிய கிராமங்கள் மதுராந்தகம் ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமலே இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதுராந்தகம் ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். முதல்வர் அறிவித்து 4 மாதங்களைக் கடந்த நிலையில் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படாமலும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலும் இருந்து வந்தது.
இது குறித்த செய்தி கடந்த ஜனவரி 17-ம் தேதி `இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். இதனடிப்படையில் அரசாணை வெளியிட பொதுப்பணித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இந்நிதி மூலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி 3,950 மீட்டர் நீளமுடைய கரையை பலப்படுத்துதல், இங்கு ஆழப்படுத்த எடுக்கப்படும் மண்ணை எதிர்புறத்தில் உள்ள 1,482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்துதல், வரத்து கால்வாய்கள் உபரி நீர் கால்வாய்கள் தூர்வாருதல், 6 கலங்கள்களின் மட்டத்தை 50 செ.மீ உயர்த்தி ஏரியின் கொள்ளளவை 694 மில்லியன் கன அடியில் இருந்து 791 மில்லியன் கன அடியாக உயர்த்துதல், ஏரியின் கரை அருகே 1,650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.