Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

மரித்துப் போன மனிதநேயம்: 500 ரூபாய்க்காக தெரு நாய் அடித்துக் கொலை- இருவர் கைது

மதுரையில் 500 ரூபாய் கொடுத்து தெருநாயை அடித்து கொன்றவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாயை அடித்து கொன்றதிற்காக மதுரையில் முதல் முறையாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை செல்லூரில் சமீபத்தில் பொதுவெளியில் ஒருவர் மனிதநேயமே இல்லாமல் மரக்கட்டையால் தெரு நாயை அடித்துக் கொன்று அதனை சாக்குப் பையில் எடுத்துசெல்லும் வீடியோ கடந்த 2 நாளாக சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவர், எந்த காரணத்தை கொண்டும் அந்த நாய் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக சாக்கு மூட்டையில் எடுப்பதற்கு முன் கட்டையால் பலமாக பலமுறை அடித்து துன்புறுத்தும் காட்சிகளும் வெளியானது. அதிர்ச்சியடைந்த மதுரையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த வீடியோவுடன் மதுரை மாநகர ஆணையாளரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் மதுரை செல்லூர் போலீஸார் விசாரித்தனர். நாயை அடித்துக் கொன்றவர் செல்லூர் கண்மாய் கரை கணேசபுரத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பது தெரிய வந்தது. போலீீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், தான் நாயை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை, செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்த முத்துசரவணன் என்பவர், தன்னை தினமும் போகும்போதும், வரும்போதும் கடிக்க வரும் நாயை கொல்ல வேண்டும் அதற்கு தான் ரூ.500 தருவதாக கூறினார். நானும் கரோனாவால் வருமானம் இல்லாமல் திண்டாடிய நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு நாயை கொன்றேன் என்றார். போலீஸார், முத்துசரவணனைப்பிடித்து பிடித்து விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார். மதுரை வடக்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் முத்துமொழி புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மாரிக்குமார் கூறுகையில், ‘‘

எந்த ஒரு விலங்குகளையும் துன்புறுத்தி கொன்றால் அவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இருக்கிறது. அதை விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டும். ஆனால், தெருநாய்களை யாரும் மதிப்பதும் இல்லை. அதற்கு என்ன தீங்கு நடந்தாலும் நாய்தானே என்று எளிதாக கடந்து செல்கின்றனர். அதுபோன்ற அலட்சியமே மதுரையில் தெரு நாய் ஒன்று மரக்கட்டையால் துடிதுடித்து கொல்லப்பட்டுள்ளது. மதுரையில் இதற்கு இதுபோல் ஏராளமான தெருநாய்கள் அடித்தும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக கன்னனேந்தல் அருகே கடந்த 3 ஆண்டிற்கு முன் 50 மயில்கள் இந்த விவகாரத்திலே இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதனால், தெருநாய் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்திலும் புகார் செய்தும் இந்த நிகழ்வும் அலட்சியமாக கடந்து செல்லப்படும் என கவலையடைந்தோம். ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அடித்து கொன்றவர், அடித்துக் கொல்ல பணம் கொடுத்து தூண்டியவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இதுபோல் இதற்கு முன் தெருநாய் கொன்றதிற்கு வழக்குப்பதிவு ஆனது இல்லை.முதல் முறையாக ஒரு கடுமமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்தகை கொடூர செயலை செய்தவர்கள் மீதான நடவடிக்கையோடு நின்றுவிடாமல் இனியும் இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க மாநகராட்சி ஆணையாளர், மாநகர ஆணயைாளர் நடவடிக்க எடுக்க வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x