Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

தமிழகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா: வரலாற்று ஆய்வாளர் தகவல்

டாக்டர் இரா. கலைக்கோவன்

திருச்சி

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தைப்பூசத் திருவிழா 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்டுள்ளதாக திருச்சி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையத்தின் இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் கூறியது:

தைப்பூசத் திருநாளை இவ்வாண்டு முதல் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பழமைமிகு விழாக்களுள் ஒன்றாக பழங்காலந்தொட்டே தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத்தன்று சிவபெருமான், முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், மக்கள் கூடுகையும் இயல்பாக நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் பழநியிலும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரின் பத்துமலையிலும் தைப்பூசம் இன்றளவும் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

தேவாரம் பாடிய மூவருள் அப்பரும், சம்பந்தரும் இந்தத் தைப்பூச விழாவை தங்கள் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். பொதுக்காலம் 6-ம் நூற்றாண்டிலேயே(சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்) இவ்விழா தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அவர்தம் பாடல்கள் குறிக்கின்றன.

‘பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று பதிகத்தில் குறிக்கும் அளவுக்கு சிறப்புற நிகழ்ந்த இந்த தைப்பூசவிழாவை மேலும் பெருமைப்படுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் ஆட்சியில் திருக்கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சோழர் காலத்திலேயே சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, விநோதக்கூத்து பலவகைக் கூத்துகள் ஆடப்பட்டன. தைப்பூசத்தன்று ஒரு கூத்தும், இறைவன் தீர்த்தமாடிய மறுநாள் தொட்டு 3 நாட்கள் தொடர்ந்து 3 கூத்துகளும், திருவாதிரைக்கு அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து 3 கூத்துகளும் ஆட முடிவானது. ஒவ்வொரு கூத்தும் ஓர் அங்கமென ஏழங்கம் ஆரியக்கூத்தாட இசைந்த மறைக்காடனுக்கு பிற செலவுகளுக்காக கோயில் பண்டாரத்திலிருந்து 14 கலம் நெல் அளிக்கப்பட்டதுடன், கோயிலுக்குச் சொந்தமான விளங்குடி நிலத்தில் ஒரு வேலி நிலம் வாழ்வூதியமாகத் தரப்பட்டது.

இதேபோல, திருநள்ளாறு, திருவாவடுதுறை, வயலகம் கோயில்களிலும் ஆரியக்கூத்து ஆடப்பட்டது. திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் புரட்டாசித் திருவிழாவின்போது 7 நாட்கள் இக்கூத்து நிகழ்ந்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர், வயலகம் விசுவநாதசாமி கோயில்களில் ஆரியக்கூத்து நிகழ்த்தப்பட்டதையும், அதை ஆடும் உரிமை பெற்றிருந்த கூத்தர்களின் பெயர்களையும் அறியமுடிகிறதே தவிர அக்கூத்து எப்போது நிகழ்த்தப்பட்டது என்பதற்குத் தகவல் இல்லை.

1,000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட தைப்பூசத்துக்குத் தமிழக கோயில் ஒன்றில் 4 நாள் கூத்து நிகழ்த்தப்பட்டதைத் தெரிவிக்கும் கல்வெட்டு திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மட்டுமே பதிவாகியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x