

அட்டைப் பெட்டிகள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதிக்கு தேவையான அட்டைப் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 30-க்கும் மேல் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ.70 கோடி வரை வர்த்தகம் நடை பெறுகிறது.
கரோனா ஊரடங்கால் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழி லும் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் நிலையில், தற்போது மூலப்பொருளான கழிவுத்தாள் தட்டுப்பாடு, விலை உயர்வால் இத் தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் கழிவுத் தாள்கள் இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் கிடைக்கும் கழிவுத் தாள்களைக் கொண்டு மறு சுழற்சி செய்து, அதன் மூலம் தயாரிக்கப்படும் கிராப்ட் தாள் களைக்(பேப்பர்கள்) கொண்டு அட்டைப் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், அட்டை பெட்டிகளின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியது: கரூரில் உற்பத்தியாகும் அட்டைப் பெட்டிகளில் 90 சதவீதம் கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கன்டெய்னர்கள் தட்டுப்பாட்டால் வெளிநாடுகளிலிருந்து கழிவுத் தாள் இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஜூலை மாதம் முதல் கிராப்ட் தாளின் விலை உயரத் தொடங்கியது.
இதனால் அட்டை பெட்டிகளின் விலை தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள காகித ஆலைகளிலிருந்து வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு கழிவுத் தாள், கிராப்ட் தாள்கள் ஏற்றுமதியை குறைப்பதுடன், கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்கி வெளிநாடுகளிலிருந்து கழிவுத்தாள் இறக்குமதி செய்து அட்டைப் பெட்டி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.