ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 11 கோபுரங்களுக்கு இன்று காலை 8.45 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேச தலங்களில் முதன்மையான தலம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத் துறை முடிவு செய்து, ஏறத்தாழ ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கோயிலில் முதல்கட்டமாக செப்டம்பர் 9-ம் தேதி 43 உபசன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 11 கோபுரங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி கடந்த 14-ம் தேதி இரவு முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஸ்ரீரங்க நாச்சியார் சன்னதியில் திருமஞ்சனமும், இரவு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

இன்று (நவம்பர் 18) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கடங்கள் புறப்பாடாகி, காலை 8.45 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

விரிவான ஏற்பாடுகள்

கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்துகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கும்பாபிஷேகத்தை பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறநிலையத் துறை, மாநகராட்சி, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in