

காட்டு யானையைத் தீ வைத்துக் கொன்றவர்களைச் சட்டத்தின் சந்துபொந்துகளில் புகுந்து தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் வசித்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த 19-ம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யானைக்குத் தீக்காயம் ஏற்படுத்திய ஆட்கள் யார் என முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ரிசார்ட்டின் உரிமையாளர்கள் பிரசாந்த் (36) ரிக்கி ராயன் (31) ரேமண்ட் டீன் (28) எனத் தெரியவந்தது. இதில் இருவரைச் சிங்காரா வனத்துறையினர் கைது செய்தனர். தற்போது, அவர்கள் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
யானை கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. யானைகள் சமூக விரோதிகளால் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவது, துன்புறுத்தப்படுவது அதிகரிப்பதற்குக் காரணம் சரியான தண்டனைச் சட்டங்கள் இல்லாததே என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலரும் இந்தக் கொடூரக் கொலையை கண்டித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவு:
“காட்டில் வாழ்பவற்றை மிருகங்கள் என்கிறோம். ஆனால், நாட்டில் நடமாடுவோரே மிருகங்கள் என நினைக்கும் அளவுக்கு, நீலகிரியில் யானையைத் தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
யானை என்பது ஒற்றை உயிரினமன்று. காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன். அதன் அருமை அறியாது, மனிதத் தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.