Published : 23 Jan 2021 07:35 PM
Last Updated : 23 Jan 2021 07:35 PM

6 வகை காய்கறிகள், உரங்கள் அடங்கிய ‘கிட்’ ரூ.510: சொட்டு நீர் பாசனத்துடன் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்க 40 சதவீதம் மானியம்- பொதுமக்களை அழைக்கும் தோட்டக்கலைத்துறை

சொட்டு நீர் பாசனத்துடன் வீட்டுக் காய்கறித் தோட்டத்தை ஊக்குவிக்க 40 சதவீதம் மானியம் வழங்கி காய்கறி விதை கிட்டுகளை இந்த ஆண்டு விற்பனை செய்வதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

சத்தான காய்கறிகளை வீட்டிலேயே விளைவித்து, அதனை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமாய் வாழ்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தற்போது பெருமளவு அதிகரித்து வருகிறது.

அதனால், எவ்வித ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளும் உபயோகிக்காமல் விளைவிக்கும் இயற்கை காய்கறிகளின் மதிப்பினை வீட்டுத் தோட்டமானது கண்முன்னே வலியுறுத்துகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தோட்டக்கலைத்துறை வீட்டுக்காய்கறித் தோட்ட கிட்டுகளை மானியத்தில் வழங்கி வருகிறது.

ஆனால், மக்கள் தற்போது மாடி வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்க பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால், தோட்டக்கலைத்துறை இன்னும் கூடுதல் மானியத்தில் வீட்டுத்தோட்ட காய்கறி விதைகள், உரங்கள் அடங்கிய கிட்டுகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரேவதி கூறியதாவது:

நடப்பாண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் மூலம் வீட்டுத்தோட்ட காய்கறித் தோட்டம் அமைக்க, தோட்டக்கலைத்துறை விதை கிட்டுகளை ரூ.510 க்கு வழங்கி வருகிறது.

தலா 2 கிலோ எடையுள்ள கேக் வடிவிலான தேங்காய் நார்க் கழிவுகள் 6 பைகள், கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட ஆறு வகையான காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம் (நுண்ணுயிர் உரம்), 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா, தலா 100 கிராம் எடை கொண்ட டிரைகோடெர்மா விரிடி, 100 மில்லி வேம்பு பூச்சிக்கொல்லி, தொழில்நுட்ப குறிப்புகள் அடங்கிய பிரசுரம் ஆகியவை கொண்ட கிட்டுகள் ஒரு நபருக்கு அதிகபட்சம் 12 பைகள் வரை வழங்கப்படும்.

இது தவிர வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கும் சொட்டுநீர் மூலம் நீர் பாய்ச்சுவதற்கு வீட்டுத் தோட்ட சொட்டு நீர் பாசன கிட்டுகளும் 40 சதவீதம் மானியத்தில், அதாவது ரூ.720க்கு ஒரு கிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் நீரினை சிக்கனமாகவும், துல்லியமாகவும் பயன்படுத்த பொதுமக்கள் முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டக்கலைத்துறை நடப்பு நிதியாண்டில் இதனை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் குறிப்பிட்ட இரண்டு வகையான கிட்டுகளுக்கும் ஆதார் நகல் சமர்ப்பித்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x