

ராஜபாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த சிறுமிக்கு 3 ஆண்டுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் சிறுமியை சுந்தர் என்பவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானர். அவர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சுந்தர் என்பவரை ராஜபாளையம் தெற்கு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சுந்தர் மீது ராஜபாளையம், சிவகாசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவையில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டார்.
தாயார் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை பரிசோதித்த விருதுநகர் அரசு மருத்துவக்குழு, சிறுமியின் வயிற்றில் 10 முதல் 11 வார கரு வளர்வதாகவும், கருவை வளர விடுவது சிறுமியின் உடல் நலம், மன நலனுக்கு உகந்தது அல்ல என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை விருதுநகர் அரசு மருத்துவக்குழு உடனடியாக கலைக்க வேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் கலைக்கப்பட்ட கருவை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான சுந்தர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் மரபணு சோதனைக்காக காத்திருக்காமல் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விசாரணை அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி 3 நாளில் கவனத்தில் எடுத்துக்கொண்டு 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்.
சட்டத்தின் பார்வையில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குழந்தை. இதனால் அவருக்கு பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்கள்) மாதம் ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
இப்பணத்தை சிறுமியின் தாய் மாமாவின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி 4 வாரம் காப்பகத்தில் தங்கியிருக்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.