‘பார்க்கிங்’ வசதி இல்லாமல் ஸ்தம்பிக்கும் மதுரை: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மதுரையில் பார்க்கிங் வசதி இல்லாததால் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து வரும் நிலையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒரு ஊரின் வளர்ச்சி, அந்த ஊரின் உள்கட்டமைப்பு வசதியில் இருக்கிறது. அதில் அமையும் விசாலமான சாலைகளும், பாலங்களும், பார்க்கிங் வசதிகளுமே அதன் வளர்ச்சிக்கு அடித்தமாகின்றன.
ஆனால், மதுரையில் அத்தகைய வசதிகள் இல்லாததால் அதன் வளர்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் தலைநகரான மதுரை, சென்னைக்கு அடுத்து மக்கள் தொகையிலும், வாகனப் போக்குவரத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரம்.
இந்த நகரின் மையமாக மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. மதுரை மட்டுமில்லாது தமிழக்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள், ஆவணி மூல வீதிகள், நேதாஜி சாலை விசாலமாக இருந்தன.
மதுரையின் ஒட்டுமொத்த வணிக நிறுவனங்கள் இந்த வீதிகளில்தான் உள்ளன. தற்போது அரசுத் திட்டங்கள், கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டன.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் இல்லை. அதுபோல் கோயிலிலும் முன்போல் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.
செல்போன்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
அதுபோல், தாசில்தார் நகர், கோரிப்பாளயம், கே.கே.நகர், அண்ணா நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், சிம்மக்கல், பெரியார் பஸ்நிலையம் உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்கிங் வசதியே இல்லை.
வியாபார நிறுவனங்களும், ஹோட்டல் நிறுவனங்களும், வணிக வளாகங்களும், திருமண மண்டபங்களும், பார்க்கிங் வசதி இல்லாமலேயே செயல்படுகின்றன.
அதனால், அந்த நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த சாலைகளையே பார்க்கிங்காக பயன்படுத்துகின்றனர். அதனால், சாலைகள் குறுகலாகி வாகனங்கள் தடையின்றி செல்ல முடியவில்லை. அதனால், போக்குவரத்து நெரிசலாகி மக்களும், வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் கூறுகையில், ‘‘மதுரை நகரின் மக்கள் தொகை 16 லட்சம். தினசரி வந்து செல்வோரின் எண்ணிக்கை 15 லட்சம். 31 லட்சம் மக்களை தாங்கும் அளவிற்கு மதுரையில் அதற்கான சாலைகள், பார்க்கிங் வசதிகள் இல்லை.
மதுரையின் பிரதான பகுதிகளான மீனாட்சியம்மன் கோயில், அண்ணா நகர், கோரிப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், சேதுபதி பள்ளி, விளக்குத்தூண், முனிச்சாலை, அப்போலோ மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, பெரியார் நிலையம் என பல முக்கிய சந்திப்புகளில் நிமிடத்திற்கு நிமிடம் கடும் நெரிசலில் சிக்கி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
நகரின் ஒவ்வொரு சாலையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. அதனால், நகரில் எந்த சாலையில் சென்றாலும் 3 கிமீ கடக்க குறைந்தப்பட்சம் 20 நிமிடங்கள்வரை அதிகப்பட்சம் நெரிசல் சரியாகும் வரை நீடிக்கிறது.
மேலும் மாசி, வெளி, ஆவணி, ஆவணி மூல வீதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட எளிதாக சென்றுவர முடியாத நிலை நீடிக்கிறது. நகருக்குள் 4 சக்கர வாகனங்களை நிறுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள், விதி மீறிய கட்டிடங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
இதனால் மதுரை மக்கள் சாலைகளில் நிம்மதியாக சென்றுவர முடியாத நிலை உள்ளது. பெரியார் நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படுகிறது.
ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. நகரின் பிற பகுதிகளிலும் மல்டிலெவல் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விட்டு பார்க்கிங் வசதி ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படுகிறது. இதேபோல் இனி நகரின் பிற பகுதிகளிலும் பார்க்கிங் வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது, ’’ என்றனர்.
