

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி., மேற்கொண்டார்.
தனுஷ்கோடியில் மீனவர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் முகாமில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தலா ரூ.1 லட்சம் வீதம் நான்கு பேர் குடும்பத்தினருக்கும் வழங்கினார்.
தொடர்ந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் வேன் மூலம் பிரச்சாரம் செய்தார்.
மண்டபத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது:
உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிடுவோம் என்பது மிக உறுதியாகத் தெரிகிறது. இங்கு நடந்து கொண்டிருக்கும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வேலைவாய்ப்பு கிடையாது.
பெண்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கிடையாது. எந்தத் தொழில் வளர்ச்சியும் கிடையாது. அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் கிடையாது.
அழிவுப் பாதையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சிப்பாதையில் மீண்டும் கொண்டு செல்ல உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
வேதாளையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். இக்கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என உறுதிமொழி ஏற்றதுபோல் வரும் தேர்தலிலும் அதிமுக., வை நிராகரிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.