Published : 23 Jan 2021 05:06 PM
Last Updated : 23 Jan 2021 05:06 PM

உண்மைச் செய்தியைத் தெரிவித்தால் எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முடியும்: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு உண்மைச் செய்தியைத் தெரிவியுங்கள். அதனால், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முடியும் என்று முதல்வர் பழனிசாமி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை செல்வபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், ஸ்டாலினுக்கு இவ்வாறாக சவால் விடுத்துள்ளார்.

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

ஸ்டாலினுக்கு எப்போதும் முதல்வர் கனவு:

அதிமுகவைப் பொறுத்தவரை நாட்டு மக்கள்தான் முதல்வர். ஆனால், ஸ்டாலினுக்கு தூங்கும் போதும், விழித்திருக்கும்போதும் முதல்வர் கனவுதான்.

ஸ்டாலின், கோவையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றிச் சென்றுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்ட பெண்ணைக் கட்சியினரை ஏவித் தாக்கிய, தலைவருக்குத் தகுதியில்லாத தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின். மக்களை ஏமாற்றி, நாடகமாடி, மக்களைக் குழப்பி, தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வரத் துடிக்கிறார். எனவே, மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. தேவையான நிதி பெறுவதற்கும், புதிய தொழிற்சாலைகள் அமைவதற்கும் குரல் கொடுக்கவில்லை. தொழில் வளம் நிறைந்த கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் வருவதற்கு திமுக அல்லது அவர்கள் கூட்டணியில் வெற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. ஆனால், இப்போது, ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்.

தமிழகத்தில் சாதி, மதச் சண்டைகள் இல்லாமல் ஒரு நல்லாட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அப்படிப்பட்ட நாட்டில் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது.

அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், மக்கள் சுதந்திரமாகச் சென்று வருகிறார்கள், இந்த நிலைகளெல்லாம் தலைகீழாக மாறிவிடும். எனவே, வருகின்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி தொடர வாக்களிப்பீர்.

அதிமுக இந்த மண்ணில் ஆட்சி செய்த ஏறத்தாழ 30 ஆண்டு காலத்தில் சிறுபான்மையின மக்கள் எவரும் பாதிக்கப்படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.

சபாஷ் வேலுமணி:

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் கடுமையான உழைப்பினால் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான துறையாக உள்ளாட்சித் துறை விளங்கிக் கொண்டிருக்கிறது.

குடிநீர் வசதி, சுகாதார வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, நல்ல சாலை வசதி, தெருவிளக்குகள் பராமரித்தல் போன்ற அனைத்தையும் செய்து கொடுக்கக்கூடிய உள்ளாட்சித் துறையின் அமைச்சர்தான் உங்கள் அமைச்சர்.

தமிழ்நாடு அரசிற்கு அதிக விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்த ஒரே அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? எத்தனை விருதுகளைப் பெற்றார்? கேட்டால் அவருக்குக் கோபம் வருகிறது.

அதிக அளவில் உழைத்து, மற்ற மாநிலங்களுடன் போட்டியிட்டு, நற்சான்றிதழ் கிடைக்க, சிறப்பாகச் செயல்பட்டால்தான் தேசிய விருதைப் பெற முடியும். சாதாரணமாக எண்ணி விடவேண்டாம்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் வழங்கியதைக்கூட எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றுத் தடுத்து நிறுத்த நினைப்பவர் திமுகவின் தலைவர் ஸ்டாலின்.

உயர்கல்வி கற்பதில் இந்தியாவிலேயே முதலிடம். சிறந்த மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சியில் கடுமையான மின்தடை. தற்போது அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து, தொழில் வளத்தை பெருக்கியுள்ளோம்.

பொய்யான குற்றச்சாட்டு:

அதேபோல, எப்போதும் ஊழல், ஊழல் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஊழலுக்குச் சொந்தக்காரர்களே திமுகவினர்தான். ஊழலின் பிரதிபலிப்பு திமுக. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசென்றால் அது திமுக அரசுதான்.
எனவே, எங்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை. ஆளுநரிடம் பொய்யான அறிக்கை தயார் செய்து கொடுத்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை ரத்து செய்துவிட்டார்கள். வருகிற 29ஆம் தேதிதான் அதற்கான டெண்டர் விடப்படும். ஆனால், அதில் ரூபாய் 450 கோடி ஊழல் செய்தார்களென்று எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் பொய் அறிக்கை கொடுத்துள்ளார். படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து இந்த ஆட்சி மீது களங்கம் கற்பிக்க வேண்டும், குற்றம் சுமத்த வேண்டுமென்று ஆளுநரிடம் கொடுத்துள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அவரால் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கையில் எதுவும் உண்மையில்லை.

துண்டுச் சீட்டில்லாமல் வரவும்:

எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நான் விவாதத்திற்கு வருகிறேன். நீங்கள் துண்டுச் சீட்டில்லாமல் வரவேண்டும், யாராவது எழுதிக் கொடுத்து அதைப் படிக்கக் கூடாது. ஏனென்றால், எழுதிக் கொடுப்பதும் என்னவென்றே தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் திமுகவின் தலைவர், அவருக்கு ஒன்றுமே தெரியாது.

கோவை மாநகரத்தில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதை ஒரு சீட்டும் இல்லாமல் நான் சொல்கிறேன், உங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம், முடியாது. எனவே, வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு உண்மைச் செய்தியைத் தெரிவியுங்கள். அதனால், எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர முடியுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று சொன்ன ஸ்டாலின் நேற்றையதினம் 200 தொகுதி என்று வந்துவிட்டார். 10 நாட்களில் 34 தொகுதிகள் காணாமல் போய்விட்டது. இன்னும் அடுத்த கூட்டத்தில் எத்தனை தொகுதிகள் குறையுமென்று தெரியவில்லை. கடைசிக் கூட்டத்தில் ஒன்றுமே இருக்காது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x