இலங்கைக் கடற்படை தாக்குதலில் பலியான 4 மீனவர்களின் உடல் புதுக்கோட்டை வந்தடைந்தது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் உடல்களுக்கு அஞ்சல செலுத்துகிறார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் உடல்களுக்கு அஞ்சல செலுத்துகிறார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதி உயிரிழந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் உடல்கள் இன்று (ஜன.23) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அங்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), எஸ்.செந்தில்குமார்(32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின்(28) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18-ம் தேதி கடலுக்கு மீன்படிக்கச் சென்றனர்.

மறுநாள் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி கவிழ்ந்தது. பின்னர், இலங்கை கடற்படையினர் தேடி அடுத்தடுத்த நாட்களில் 4 மீனவர்களையும் சடலங்களாக மீட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.கடற்படையினரின் படகு மூலம் கடல் வழியாக கொண்டு வந்து, இந்தியா- இலங்கை சர்வதேச எல்லையில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் சென்ற மீன்வளத் துறை அலுவலர்கள், மீனவர்களிடம் சடலங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டன.

அந்த சடலங்கள் கோட்டைப்பட்டினம் கரைக்கு கொண்டுவரப்பட்டது. 4 உடல்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மீன்வளத் துறை துணை இயக்குநர் சர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அலுவலர்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 4 ஆம்புலன்ஸூகள் மூலம் ராமேசுவரத்துக்கு மீனவர்களின் உடல்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணமும், விதிகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in