

நாகர்கோவிலில், இன்று தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜிீத் உட்பட திரளானோர் சைக்கிள் ஓட்டிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய வாக்காளர் தினம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது.
மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்நிலையில் நாகர்கோவிலில் இன்று மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.
சைக்கிள் பேரணியில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி ஆகியோர் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், ஜவான்ஸ் அமைப்பினர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
பேரணியின்போது வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு சென்றனர்.
வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதைத் தங்களது முதல் கடமையாக கொள்ள வேண்டும். தங்களின் வாக்குரிமையை யாரும், எதற்காகவும் விட்டு கொடுக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வலியுறுத்தினார்.