

லாரிகள் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு லாரிகள் இயக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடி களையும் அகற்ற வேண்டும், லாரி வாடகையில் டீடிஎஸ் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் லாரி உரிமை யாளர்கள் கடந்த 1-ம் தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினர். 3-வது நாளாக நேற்றும் லாரிகள் ஓட வில்லை. இதனால் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள், சிமென்ட், இரும்பு உள் ளிட்டவற்றைக் கொண்டுசெல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 6.90 லட்சம் லாரிகளில் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப் படுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து தென்இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங் கிரஸ் தலைவர் சென்னா ரெட்டி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் சென்னையில் நேற்று கூறியதாவது:
சுங்கச்சாவடிகளை முறைப் படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், நாங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. எங்கள் சங்கங்களின் கீழ் இருக்கும் சுமார் 42 லட்சம் லாரிகள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் 3 லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன.
லாரி ஓட்டுவோர் மீது தாக்குதல்
ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கும் நிலையில் சரக்குப் போக்குவரத்து மிகவும் முக்கியமாகும். கர்நாடகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் இயக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் சில இடங்களில் எங்கள் லாரி ஓட்டுநர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, லாரி இயக்குபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசு, காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுடன் வரும் 5-ம் தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.