Last Updated : 23 Jan, 2021 02:21 PM

 

Published : 23 Jan 2021 02:21 PM
Last Updated : 23 Jan 2021 02:21 PM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்; நாடு முழுவதும் ஒரே வரி: கோவையில் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்படும். நாடு முழுவதும் "ஒரே வரி, குறைந்தபட்ச வரி" திட்டம் அமல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டியில் சிறு, குறு தொழில்முனைவோருடனான கலந்துரையாடல் கூட்டம் காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் இன்று (23-ம் தேதி) நடந்தது. இக்கூட்டத்தில் ஏராளமான தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. பேசியதாவது :

”தொழில்துறையில் ஜி.எஸ்.டி முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனக்கள் ஜி.எஸ்.டியால் பாதிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். வரிக் குறைப்பு செய்ய வேண்டும். நாங்கள் ஜி.எஸ்.டியை நம்பவில்லை. வட்டிக் குறைப்பை அமல்படுத்தச் சரியான திட்டம் எங்களிடம் இருக்கின்றன. குறைந்த வரிச் சலுகையைத் தர வேண்டும். மக்களைப் புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால், பாஜக இதைப் புரிந்து கொள்ளாது.

அவர்களுக்கு, இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தெரியவில்லை. வங்கி நடைமுறைகள் பெரும் முதலாளிகளுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன. அரசின் பொருளாதார நடவடிக்கை சிறு, குறு தொழில் நிறுவனத்தாரைப் பாதிக்கின்றது. இதனால், பெரு நிறுவனத்தாருக்குச் சாதகமாக இந்த அரசு செயல்படுகின்றது.

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் சிறு, குறு தொழில் முனைவோரைப் பாதுகாக்க நல்ல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாஜக அரசு, நம் நாட்டின் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதனைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

வேற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது முக்கியம். அதை இந்தியா முழுவதும் சரியாக இருக்கும் பட்சத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால், அனைத்தும் பாதிக்கப்படும். ஒரே நாடு, ஒரே மொழி தத்துவத்தால் பல பிரச்சினைகள் வரக்கூடும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்யப்படும். நாடு முழுவதும் "ஒரே வரி, குறைந்தபட்ச வரி" திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டு போகின்றது. இது தொழிலாளர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது குறையும். நம் பொருளாதார ரீதியாக சிறு, குறு தொழில் வைத்து சீனாவை மிஞ்ச முடியும், அதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல், வரி உள்ளிட்ட சலுகைகளால், உங்கள் கைகளைக் கட்டி வைத்துள்ளனர். அதைத் தகர்த்தால் சிறு, குறு தொழில்கள் வெற்றி பெற முடியும். இதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறும்.

தற்போது உள்ள ஜி.எஸ்.டி அனைவருக்கும் எதிராகத்தான் உள்ளது. கரோனா காலத்தில் வரிக் குறைப்பு இருக்கக் கூடாது என ஏற்கெனவே அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். உங்கள் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசுகிறேன். நமது கல்வி முறையை மாற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் பேசுவோம். வெளிநாட்டுக் கொள்கையைப் போலவே கல்விக் கொள்கையும் உள்ளது.

வேலைவாய்ப்புக்கான கல்விக் கொள்கை கிடையாது. என்ன தேவையோ அந்தக் கல்வி கிடையாது. கல்விக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற வேண்டும்”.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x