Published : 23 Jan 2021 02:14 PM
Last Updated : 23 Jan 2021 02:14 PM

தீ வைத்து காட்டு யானையைக் கொன்ற மூவர் மீது குண்டர் சட்டம்: வனத்துறை பரிந்துரை 

உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானைக்குத் தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவர் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாகச் சுற்றித் திரிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த 19-ம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. அது வனத்துறையினரையும் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இதனையடுத்து யானைக்குத் தீக்காயம் ஏற்படுத்திய நபர்களைப் பிடிக்க, முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இரவு நேரத்தில் அந்த யானை சென்றதும் அப்போது சிலர் அந்த யானையின் மீது எரியும் துணியை வீசியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சார்ந்த மல்லன் என்பவரது இரண்டு மகன்களும், அதே பகுதியைச் சார்ந்த பிரசாந்த் (36) என்பதும் தெரியவந்தது. அதில் மல்லன் என்பவரது மூத்த மகன் ரிக்கி ராயன் (31) தப்பி ஓடிய நிலையில் ரேமண்ட் டீன் (28) மற்றும் பிரசாந்த் (36) ஆகிய இருவரைச் சிங்காரா வனத்துறையினர் கைது செய்து, அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த வீட்டில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைத்திருந்த 3 விடுதி அறைகளுக்குக் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன், மசினகுடி ஊராட்சிச் செயலாளர் கிரண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சீல் வைத்தனர்.

இந்நிலையில், காட்டு யானைக்குத் தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ''தலைமறைவாக உள்ள ரிக்கி ரயானைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவை ஆராய்ந்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள். மசினகுடி பகுதியில் அனுமதியின்றிச் செயல்பட்டு வரும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x