Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

வேட்புமனு தாக்கல் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; வாக்குச்சாவடி எண்ணிக்கை 93 ஆயிரம் வரை உயரும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் வாக்குச்சாவடி எண்ணிக்கை 93 ஆயிரம் வரை உயரும் என்றும், வேட்புமனு தாக்கல் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தேர்தல்ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கரோனா காலம் என்பதால் ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒருவாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதற்கான இடங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

திட்டமிட்டபடி ஜன.20-ம் தேதிஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாற்றம்செய்ய விரும்புவோர், புதியவர்கள் பெயர் சேர்க்க கால அவகாசம்அளிக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு முன்புவரை பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.

வாக்களித்த சின்னம் குறித்துஅறியும் விவிபேட் கருவி மற்றும் மின்னணு இயந்திரங்களின் முதல்கட்ட சரிபார்ப்பு பணி 12 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் பணிகளை விரைவுபடுத்தி பிப்.10-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் தற்போது 68 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்றஅடிப்படையில் வாக்குச்சாவடிகள் தற்போது 93 ஆயிரம் வரை உயர்த்தப்பட உள்ளது. அதிகரிக்கப்பட உள்ள வாக்குசாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை பட்டியலிட்டு அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை உயர்வதால் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்படுத்தப்படுவர். தேர்தல் பணிக்கான காவல்துறையினர் எண்ணிக்கையும் உயரும். தலைமை தேர்தல் ஆணையரின் தமிழக ஆய்வுப் பயணம் குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில், 80 வயதுக்குமேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதிஅனுமதிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தபால் வாக்கு வசதியை பயன்படுத்தலாம். மற்றவர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x